நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தங்கதுரையின் மனைவி வெண்ணிலா பிரவசவத்துக்காக கடந்த சில நாள்களுக்கு முன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த ஐந்து நாள்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், வெண்ணிலா சிகிச்சை பெற்று வந்த வார்டுக்கு இளம் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை மதியம் வந்துள்ளார். அவர், வெண்ணிலாவின் பச்சிளம் குழந்தையை எடுத்து கொஞ்சினார். பிறகு குழந்தைக்கு மஞ்சள் காமாலை உள்ளதால் மருத்துவர்களிடம் காண்பித்துவிட்டு வருகிறேன் எனத் தெரிவித்து குழந்தையை எடுத்துச் சென்றுள்ளார். அவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவர் குழந்தையை கடத்தி சென்று இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்தி வெண்ணிலா சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், குழந்தையைக் கடத்திச் சென்ற இளம்பெண்ணைத் தேடி வந்தனர்.
அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வாழப்பாடியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி தீவிர விசாரணையில் ஈடுபட்ட சேலம் மாநகர போலீஸார், காரிப்பட்டியைச் சேர்ந்த பெண் வினோதினியை கைது செய்து, அவரிடம் இருந்த ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் குழந்தையை கடத்திய வினோதினியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தை கடத்தப்பட்ட 15 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சேலம் மாநகர போலீஸாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.