அமர்க்களத் தொடர்: அஜித்தின் “என்னை பார்க்கிறேன்”!
வருஷம் 2001. ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஒருநாள். ஹைதராபாத்தில் ‘ரெட்’ படப்பிடிப்பில் இருந்தார் அஜித். அவரிடம் பேட்டி எடுத்து முடித்துக் கிளம்பியபோது ‘கூடுதலாக ஒன்றிரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாமே?’ என்று அஜித் அன்பு வேண்டுகோள் வைக்க, அப்போது உருவானது இந்தத் தொடர். அவர் மனம் திறந்து மணிக்கணக்கில் பேசியவைதான் இந்த டைம் டிராவல் பதிவுகள்… (பாகம் 2)
இவ்வளவு காலமும் அஜித் நல்லா நடிக்கிறார். ஓகே. சண்டையும் நல்லா போடுறார். அதுவும் ஓகே. ஆனா டான்ஸ்? அதுல நான் கொஞ்சம் வீக்காத்தான் இருந்தேன். எனக்கே அது தெரியும். எனக்கு இருக்கிற முதுகுவலிப் பிரச்னை எல்லாருக்கும் தெரியும். அதையும் மீறி என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடினேன். ‘தீனா’ படத்துல வழக்கத்தைவிட பெட்டரா இருந்ததுன்னு நினைக்கிறேன். என்னோட ரசிகர்கள் இதைப்பத்தி என்ன நினைக்கிறாங்கங்கறதைவிட, எனக்கே இது ஒரு பெரிய மனக்குறையா இருந்துச்சி. அந்தக் குறை இப்ப ‘பூவெல்லாம் உன் வாசம்’ மூலமா ஓரளவு தீர்ந்துடுச்சின்னே சொல்லலாம்.
முந்தியெல்லாம் ஒரு டான்ஸ் மூவ்மென்ட் சரியா வரலைன்னா, ‘இது நமக்கு சரிப்பட்டு வராது’ன்னு விட்டுடுவேன். அப்புறம் எனக்காக கொஞ்சம் சிம்பிளான மூவ்மென்ட் ட்ரை பண்ணுவாங்க. ஆனா, இந்தப் படத்தோட பாட்டுகளும், மாஸ்டர் ராஜு சுந்தரமும் என்னை அப்படி விடல. நானும் பின்வாங்காம இது நமக்கு வரும், வந்தே தீரும்னு ஆடிக் காட்டியிருக்கேன். எடிட்டிங் முடிஞ்சி, பாட்டுகளைப் பாத்தப்ப என்னோட டான்ஸை பார்த்து எனக்கே ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்துச்சி.
நம்மளோட சரியான இன்வால்வ்மென்ட் இருந்தா, நமக்கு வரவேண்டியது வந்தே தீரும். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ‘ரெட்’ பட ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் வந்து பத்து நாளாச்சி. சிட்டி மொத்தமும் சென்ட்ரலைஸ்டு ஏ.சி. செய்த மாதிரி ஓர் அற்புதமான க்ளைமேட். ஆனா, இதுக்கு எதிர்மறையா நம்ம சென்னை சூடா இருக்குங்கிறது எனக்குத் தெரியும். என்னைப் பத்தி அதையும் விட சூடான செய்திகள் நடமாடுறதும் எனக்குத் தெரியும். சப்ஜெக்ட் ‘ஏறுமுகம்’. இனி, மறைமுகமா பேசுறதுக்கு எதுவும் இல்லைங்கிறதுனால நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன்.
யெஸ்… ‘ஏறுமுகம்’ டிராப் ஆயிடுச்சி. மனசுக்குள்ள ஓர் ஓரமா மறைச்சி வெச்சுக்கிட்டு எனக்கு எதுவும் பேசத் தெரியாது. டைட்டில், டைரக்டர், கதை எதுவுமே முடிவாகாம, இந்தப் படத்துக்கு நான் பூர்ணசந்திரராவ் சார்கிட்ட இருந்து அட்வான்ஸ் வாங்குனது ஜனவரி இரண்டாயிரத்துல. முதல்ல இந்தப் படத்தைப் பண்றதா இருந்தவர், டைரக்டர் பாலா. ‘‘ ‘சேது’ படம் பார்த்தேன். நல்லா பண்ணியிருக்கார். அவருக்கும் தனியா அட்வான்ஸ் கொடுத்து வெச்சிருக்கேன்’’ன்னு சொன்னார்.
அப்போ நான், ‘பாலாகிட்ட கதை எனக்காகப் பண்ணச் சொல்லி-யிருக்கீங்களா? இல்ல, பொதுவா பண்ணச் சொல்லி-இருக்கீங்களா?’ன்னு கேட்டேன்.
‘‘இல்ல, சும்மா கதை பண்ணச் சொல்லியிருக்கேன். அவர் முடிச்ச உடனே கேட்டுப் பாத்து முடிவு பண்ணலாம்’’னார். புரொடியூசர் கேட்ட பிறகு, மார்ச் முதல் வாரத்துல பாலாகிட்ட கதை கேட்டேன். பாலா முழுக் கதை தயாராகாததுனால கதையோட ‘லைன்’ மட்டும் சொன்னார். என்னோட கல்யாண சமயம் அது. ‘‘லைன் நல்லாருக்கு. நான் ஹனிமூன் போயிட்டுத் திரும்பி வந்தவுடனே, முழு ஸ்க்ரிப்ட்டும் சொன்னா, உடனே ஷூட்டிங் போயிரலாம்’’னு சொல்லியிருந்தேன்.
ஹனிமூன் முடிஞ்சி வந்து, திரும்ப ஒரு சிட்டிங் உட்கார்ந்தோம். நான் மார்ச்ல என்ன கேட்டேனோ, அதையேதான் திரும்பவும் சொன்னார், பாலா. அப்ப, அவர் வெளிப்படையா இன்னொரு விஷயமும் சொன்னார். அதாவது, ‘‘எனக்கு புரொஃபஷனலா கதை சொல்ல வராது. ஆனா, விஷுவலா நல்லா எடுப்பேன்’’ என்பதுதான் அந்த விஷயம்.
எனக்கு இந்த இடத்துல ஒரு தர்மசங்கடம். இப்படி ஒரு நிலைமை இப்பவும் சினிமாவுல இருக்கு. ஒருசிலர் பிரமாதமா கதை சொல்வாங்க. ஆனா, அதை சொன்னபடி அவங்களுக்குபடமா எடுக்கத் தெரியாது. இன்னும் சில பேருக்கு கதை சொல்ல வரவே வராது. ஆனா, படமா நல்லா எடுப்பாங்க. இதுல பாலா, கண்டிப்பா இரண்டாவது வகையைச் சேர்ந்தவரா இருக்கணும். ஏன்னா, ஏற்கெனவே ‘சேது’வுல நிரூபிச்சவர். அவரோட திறமையை நான் சந்தேகப்பட வாய்ப்பே இல்ல. ஆனா, அப்ப நான் இருந்த நிலைமையில என்னால வெறுமனே ‘லைன்’ மட்டும் கேட்டுட்டு படத்துக்கு ஓகே சொல்ற ரிஸ்க்கை எடுக்க முடியாது.
ஒரு படத்தோட வெற்றி,தோல்வி நம்ம கையில இல்லைன்னாலும்கூட, ஏற்கெனவே சொன்ன மாதிரி, என்ன எடுக்கப் போறோம்னு தெரியாம ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போக நான் விரும்பலை. அதனால பாலாகிட்ட நான் என்ன நினைச்சேனோ, அதை மறைக்காம சொன்னேன். ‘‘உங்க திறமை மேல எனக்கு துளிக்கூட சந்தேகம் இல்ல. ஆனா, எனக்குக் கிடைச்ச நிலைமையைக் காப்பாத்திக்-கிறதுக்காக சினிமாவுல ஒவ்வொரு நாளும் நான் போராடிக்-கிட்டிருக்-கேன்’னு சொன்னேன். அந்தப் படத்தை பாலா பண்ணாமப் போனதுங்கிறது எனக்கும் பாலாவுக்கும் புரொடியூசருக்கும் எந்தவித மனஸ்தாபமும் இல்லாம பரஸ்பரம் புரிஞ்சிக்கிட்டுதான் நடந்தது. இதையொட்டி எங்களுக்குள்ள எந்தவிதமான பிரச்னையும் வரலை. ஆனா, பத்திரிகைகள்ல இஷ்டத்துக்கு எழுதினாங்க. ஏனோ யாருக்கும் விளக்கம் கொடுக்கணும்னு எனக்குத் தோணலை.
நடுவில் ‘ரெட்’ இயக்குநர் ராம்சத்யா, அடுத்த ஷாட்டுக்கான வசனத்தைச் சொல்ல வருகிறார். ‘அப்பவே பேசலை. இப்ப ஏன் பேசணும்?’ என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். தன் போக்கில் அமைதியாகப் போய்க் கொண்டிருக்கும் நதிகூட வெள்ளப்பெருக்கால் உடைத்துக்-கொண்டு வருவதில்லையா? என் அமைதியும் உடைய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
“அப்புறம் இதே புராஜெக்ட்டுக்கு டைரக்டரா வஸந்த் கமிட் ஆனார். இந்தமுறை டைரக்டர் என்னோட சாய்ஸ். ஏதோ ஒரு காரணத்துக்காக வஸந்தைப் பத்தி கோபமா பேட்டிகள் தந்திருக்கேன். ‘அவர் படத்துல நடிச்சிதான் நேஷனல் அவார்டு வாங்கணும்னா, அந்த அவார்டே எனக்கு வேண்டாம்’னெல்லாம் பேசியிருந்தேன். ஆனா, யோசித்துப் பார்த்தா, ‘ஆசை’ மூலமா எனக்கு பிரேக் தந்தவர். தமிழ் சினிமாவுல எவ்வளவோ டைரக்டர்கள் மத்தியில இன்னும் நல்லா இருந்திருக்க வேண்டியவர். எங்கேயோ மிஸ் ஆயிடுச்சி. புரொடியூசர்கிட்ட இதைப் பத்திப் பேசிட்டு, நானே ஈகோ எதுவும் பாக்காம டைரக்டர் வஸந்த்கிட்ட பேசினேன். ‘‘உங்களைப்பத்தி தப்பா பேட்டியெல்லாம் கொடுத்திருக்கேன். அதை மனசுல வெச்சிக்காதீங்க. நாம சேர்ந்து இந்தப் படம் பண்ணலாம்’’னு சொன்ன உடனே, அவரும் சரின்னுட்டார். ஏப்ரல்ல ஆரம்பிச்சிருக்க வேண்டிய படம், வஸந்த் சாரோட ஸ்க்ரிப்ட் ரெடியாகுறதுக்காக ஜூன், ஜூலைக்குத் தள்ளிப் போச்சி. ஆனா, துரதிர்ஷ்டவசமா அவரோட ஸ்க்ரிப்ட்டும் ரெடியாகலை. ஸோ, கால்ஷீட் கொடுத்த ஒரே காரணத்துக்காக, ஸ்க்ரிப்ட் ரெடியாகாம ஷூட்டிங் போக விரும்பாம, அந்த காம்பினேஷனும் டிராப் ஆச்சி.
தொடர்ந்து ஒரு படத்துக்-காகவே காத்திட்டு இருக்க வேண்டா-மேன்னு நான் ‘சிட்டிசன்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ பண்ண ஆரம்பிச்சேன். புரொடியூசரும் சும்மா இருக்கலை. அவரும் ‘தில்’ படம் ஆரம்பிச்சி பிஸியாத்தான் இருந்தார். நடுவுல நானும் அவரும் மீட் பண்ணினப்ப, ‘என்ன இந்த புராஜெக்ட் சரியா செட் ஆகாம இழுத்துக்கிட்டே போகுது’ன்னு சொல்லி டைரக்டர் சரணை கமிட் பண்ணி, படத்துக்கு ‘ஏறுமுகம்’னு டைட்டில் வெச்சோம்.
இப்படி ஒரு முடிவு எடுத்த பிறகு ஷூட்டிங் போறதுக்கு எட்டு மாச டைம் இருந்தது.
அடுத்த செவ்வாய்க்கிழமை சந்திப்போம்..!
