Rewind: அமர்க்களத் தொடர்; அஜித்தின் “என்னை பார்க்கிறேன்”! – Kumudam

Spread the love

அமர்க்களத் தொடர்: அஜித்தின் “என்னை பார்க்கிறேன்”!

– முத்துராமலிங்கன்


வருஷம் 2001. ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஒருநாள். ஹைதராபாத்தில் ‘ரெட்’ படப்பிடிப்பில் இருந்தார் அஜித். அவரிடம் பேட்டி எடுத்து முடித்துக் கிளம்பியபோது ‘கூடுதலாக ஒன்றிரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாமே?’ என்று அஜித் அன்பு வேண்டுகோள் வைக்க, அப்போது உருவானது இந்தத் தொடர். அவர் மனம் திறந்து மணிக்கணக்கில் பேசியவைதான் இந்த டைம் டிராவல் பதிவுகள்…

தோல்விகளை எதிர்கொள்வது சுலபம். ஆனால், வெற்றிகளைக் கையாள்வதற்குத்தான் பெரும் சாமர்த்தியம் வேண்டும்.

தொடர் எழுதுறது, அதுவும் அந்தத் தொடர்ல சுயபுராணம் பாடுறது, மனசு கனக்க ஃப்ளாஷ்பேக் வலிகளுக்கு ஒத்தடம் கொடுக்கிறது மாதிரியான தர்மசங்கடமான விஷயம் வேற எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன். 
நட்சத்திர அந்தஸ்தின் வழியா ரசிகர்களுக்கும் எனக்கும் நடுவுல மெல்லிசா ஒரு திரை இருக்கு. இது மௌனம் காக்கப்படவேண்டிய ஒரு சமாசாரம். அந்த மௌனத்தை உடைக்க வேண்டாமே என்கிற துனாலதான் தொடர் எழுதவே நான் பயப்படுறது.

குலுமணாலியில் ‘பூவெல்லாம் உன் வாச’த்தின் கடைசி ஷெட்யூல் முடிந்து, அடுத்த படமான ‘ரெட்’டுக்காகத் தலையை க்ளீன் ஷேவ் செய்து ஹைதராபாத் புறப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம். (மொட்டைத்) தலைக்கு மேல் வேலை. ஒரு தயாரிப்பாளரைச் சந்திக்கவேண்டும். இரண்டு உதவி இயக்குநர்கள் கதை சொல்ல வருகிறார்கள்.  ‘‘இதோ பத்து நிமிஷத்துல நானே கூப்பிடுறேன்’’ என்று ஷாலினியிடம் சொல்லி அரைமணி நேரமாகிவிட்டது.

இத்தனைக்கும் நடுவே எதைப்பத்தி எழுதுறதுன்னு ஒரு குழப்பம்தத்துவங்களையோ, அறிவுரை களையோ எழுதுற அளவுக்கு நான் ஞானி இல்ல. அதுக்கான வயசும், அனுபவமும்கூட எனக்கு சலிப்பான விஷயம். நேற்று _ இன்று _ நாளைகள்ல இன்று மட்டும்தான்நிஜம்னு நம்புறவன் நான். நேற்றைய தினங்களைப் பத்திப் பேசுறது இன்றைய தினங்களைச் சாப்பிடுற மாதிரி. மத்தவங்களைப் பத்திப் பேசுறதும், அபிப்ராயம் சொல்றதும்கூட அப்படித்தான். அதனாலதான் மத்த எல்லாத்தையும் விட்டுட்டு ‘என்னை நானே பார்க்கிறேன்’. 

‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘தீனா’, ‘சிட்டிசன்’னு தொடர்ந்து ஆக்ஷன் படங்களா நடிச்சிட்டிருக்கப்ப, ‘பூவெல்லாம் உன் வாசம்’ங்கிற ஃபேமிலி சப்ஜெக்ட்ல, அதுவும் பெரிய நட்சத்திரக் கூட்டத்துக்கு நடுவுல நானும் ஒருத்தனா நடிக்கக் கமிட் ஆனதுல எல்லாருக்கும் பெரிய ஆச்சரியம். “உங்களோட ஆக்ஷன் படங்கள்லாம் நல்லா ஓடிட்டிருக்கு. இப்ப இது தேவையா?’’ன்னு சிலர் எங்கிட்ட நேரடியாவே கேட்டாங்க.

ஆரம்பத்துல இருந்தே, ஒரு நடிகனா நிறைய வித்தியாசமான கேரக்டர்கள் பண்ணணும்ங்கிற வெறி எங்கிட்ட உண்டு. சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கணும்ங்கிற ஆசை இருக்கு. அது மாதிரியான சவாலான கேரக்டர்கள் வந்தா, எந்த அளவுக்கும் இன்வால்வ்மென்ட்டோட நடிக்கத் தயார்னு வெட்கத்தை விட்டுச் சொல்ல எப்பவுமே நான் தயங்கினதில்ல. அது என்னோட சுபாவம்.

அந்த வகையில் ‘பூவெ. உ. வா.’ எனக்கு வித்தியாசமான பேர் வாங்கித் தரக்கூடிய ஃபேமிலி சென்டிமென்ட் படம். இந்தப் படத்தோட கதையை டைரக்டர் எழில் சொல்ல வந்தப்ப, அவர்கிட்ட என்னைக் கவர்ந்த விஷயம், பக்காவா முழு ஸ்கிரிப்டோட அவர் தயாரா வந்தது. என்கிட்ட சொல்றப்ப அந்தக் கதை இனிமே ஒரு துளி வேலைகூட தேவைப்படாம நூறு சதவிகிதம் தயாரா இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல போய் புதுசா ஸீன் யோசிக்க வேண்டியதில்ல. ஒரு சேஃப்டிக்காகன்னு சொல்லி அப்படி ஒரு ஸீன்; இப்படி ஒரு ஸீன் எடுத்து வெச்சிக்க வேண்டியதில்ல.

இன்னைக்குப் படம் முடிஞ்சு ரிலீஸாகத் தயாரா இருக்கிற நிலைமையில, சினிமா சம்பந்தப்பட்ட எங்க எல்லாருக்குமான முக்கியமான விஷயமா இதை நான் நினைச்சிப் பார்க்கிறேன்.

ஒரு படம் பண்றப்ப அதோட ரிசல்ட்டைமட்டுமே மனசுல வெச்சிட்டுப் பண்ணணும்ங்கிறதுக்காக இதை நான் சொல்லல. ஆனா, நாம என்ன பண்ணப்போறோம்ங்கறது நமக்குத் தெரியணும். அது ரொம்ப முக்கியம். இதுவரைக்கும் நான் நடிச்ச எத்தனையோ படங்கள்ல இது புரிஞ்சிக்காமலே நான் நடிச்சிருக்கேன். அரைகுறை ஸ்கிரிப்டோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய், ஜெனரேட்டர் ஓடிட்டிருக்கப்ப ஸீன் ரெடியாகி ஷூட்டிங் நடந்திருக்கு. அந்தத் தப்பை இனிமே நான் பண்ணமாட்டேன். ஏன்னா, எனக்கு இன்னைக்கு இருக்கற மார்க்கெட்டுக்கு நிறைய ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கு. 

அதனால இந்தப் படத்துல நான் வெறும் நடிகன்தான்னு சொல்லி என்னால ஒதுங்க முடியாது. என்னை நம்பி கோடிக்கணக்குல கொட்டத் தயாரா இருக்கிற புரொடியூசர்களுக்கு சாதகமான நடிகனா, அவங்க பாரத்தை என் தோள்கள்லயும் கொஞ்சம் சுமந்துக்கிற ஆளா நான் இருக்கணும்னு நினைக்கிறேன். ஏதோ ஒரு புரொடியூசர்கிட்ட சில மாசங்களுக்கு முந்தியே அட்வான்ஸ் வாங்கிட்டு அந்தப் படத்தை ஆரம்பிக்காம இருக்கோம்னா அதுக்கு ஒரே காரணம், சப்ஜெக்ட் முழுசா ரெடியாகாததாத்தான் இருக்கும். மத்தபடி காரணமே இல்லாம ஒரு படத்தைத் தள்ளிப் போடுறதும், வேறொரு புரொடியூசர் நிறைய பணம் கொடுத்தார்ங்கிறதுனால அதை முதல்ல ஆரம்பிக்கிறதும் என்னோட அகராதியில இல்ல.

முழு ஸ்கிரிப்ட் எப்ப ரெடியோ, அப்ப நான் ஷூட்டிங்குக்கு ரெடி. இதுதான் ‘பூ.உ. வாசத்து’ல நடந்தது. இந்தப் படத்தைப் பத்திப் பேசுறப்ப எழில் தவிர இன்னும் ரெண்டு பேரைப் பத்தி கண்டிப்பா சொல்ல வேண்டியிருக்கு. முதலாமவர், படத்தோட புரொடியூசர் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன். படத்துக்கு இவர் பண்ணின விளம்பரங்களைப் பத்திப் பேசாத நபர்களே இருக்க முடியாது. 

சில நல்ல படங்கள் சரியான விளம்பரங்கள் இல்லாததுனால சீக்கிரமே படுத்துக்குது. 50 நாள் ஓடவேண்டிய படம்கூட முதல் வாரத்துலயே பெட்டிக்குள்ள போயிடுது. அப்படிப்பட்ட சூழல்ல இவர் ஒரு தன்னம்பிக்கையான புரொடியூசர். இன்னொருத்தர் மியூசிக் டைரக்டர் வித்யாசாகர். நான் நடிச்ச ‘உயிரோடு உயிராக’ படத்துக்கு மியூசிக் பண்ணினப்பவே இவர் பெரிய லெவலுக்கு வருவார்னு எதிர்பார்த்தேன். எங்கே, எப்படி மிஸ் ஆச்சின்னே இன்னைக்கு வரைக்கும் புரியல. இந்தப் படம் இதுவரைக்கும் அவருக்கு வந்து சேரவேண்டிய எல்லாப் புகழையும் மீட்டுத் தரும்னு நம்புறேன். பாட்டுகள் அவ்வளவு நல்லா வந்திருக்கு. இந்தப் பாட்டுகளால எனக்கு ஒரு சவால் வந்துச்சின்னே சொல்லலாம்.

அந்த சவால் என்ன?

அடுத்த செவ்வாய்க்கிழமை சந்திப்போம்..!

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *