“புத்தருக்கு தியானம்: எனக்கு எழுத்து!” (பாகம் 2)
– ஜெயமோகன்
26.10.2000 அன்று குமுதம் இதழிலில் வெளிவந்த பேட்டி
உங்களது குடும்பச் சூழ்நிலை அப்போது எப்படியிருந்தது?”
“எங்கம்மாவின் அண்ணன் பெரிய கம்யூனிஸ்ட். அந்தக் கம்யூனிஸ்ட் பின்னணியில் வந்தவர் எங்க அம்மா.
எங்க அப்பா, அம்மா இருவருமே மாறுபட்ட குணாதிசயங்கள். பிரியத்தில் பாதி விஷமாக மாறிவிடும் உறவு அது. எங்க அப்பா, அம்மா இருவருக்கும் பரஸ்பரம் தீவிர அன்பு இருந்தது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அப்பாவின் வாழ்க்கையில் இன்னொரு பெண் கிடையாது. அவருக்கு இலக்கியமே தெரியாது.
எங்கம்மா அதற்கு நேர் எதிராகப் பெரிய படிப்பாளி. தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலுமே படிப்பார்கள். சில கதைகளை அம்மா எழுதி மலையாளத்தில் பிரசுரமாகியிருக்கிறது.
என்ன காரணத்தாலோ அவர்களுக்கிடையில் கடுமையான உரசல் இருந்து கொண்டே இருந்தது. எங்கப்பாவுக்கு எங்கம்மா அவங்களோட அண்ணன் மீது வைத்திருந்த பக்தி மாதிரியான உணர்வைத் தாங்கமுடியவில்லை என்று ஊகிக்கிறேன். எங்கள் வீட்டில் நல்ல புஸ்தகச் சேகரிப்பு இருந்தது. இரண்டாயிரம் புத்தகங்கள் வரை இருந்தன.
எங்க அம்மா தோட்டத்தில் புல் பறித்துக் கொண்டிருப்பார்கள். கூடவே நானும் புல் பறிப்பேன். ஆங்கில நாவல் பற்றி அம்மா பேசிக் கொண்டு புல் பறிப்பது நடக்கும். அபூர்வமாக ஒரு பஸ் வந்து போகிற அந்தக் குக்கிராமத்தில் புல் பறித்தபடி இப்படியொரு இலக்கிய சம்பாஷணை நடக்கும் என்று மற்றவர்கள் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாது. எங்க அம்மாவும் நானும் தனி உலகத்தில் இருந்தோம். மற்றவர்களுக்கு இப்படியொரு உலகம் இருப்பதே தெரியாது.
இப்படி இருந்த என்னுடைய அம்மா தற்கொலை செய்து கொண்டது எனக்குப் பெரிய அடியாக இருந்தது. அம்மா அம்மாதிரியான வழியைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்பதற்கான சிறுபொறி கூட எனக்குத் தெரியாது. என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகப்பெரிய துக்கங்கள், ஏமாற்றங்கள் இருந்தன என்பதெல்லாம் பிறகுதான் எனக்குத் தெரிந்தது.
எங்கப்பா மீது எனக்கு விருப்பும் வெறுப்பும் கலந்த மரியாதை உண்டு. ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அப்பா கறாரானவர். ஆனாலும், என்னை எந்த விதத்திலும் அவர் எதற்கும் வற்புறுத்தினதே கிடையாது. ஆனால் எங்கப்பா கடைப்பிடித்த ஒழுக்கங்களுக்குத்தான் நானும் வந்து சேர்ந்திருக்கிறேன். என் அப்பாவும் தற்கொலை செய்து கொண்டார். கடும் மன அவஸ்தை, நெருக்கடி. இருந்தும் எந்தப் பழக்கங்களுக்கும் ஆட்படாமல் நான் தனியான ஆளாக இருந்தேன். தீவிரமான சில மனநிலைக் கோளாறுகள் அப்போது இருந்தன என்று இப்போது தெரிகிறது.
அப்போது ஒரு முறை ரயிலில் போய்க்கொண்டிருந்தேன். அருகே இருந்த பயணி கையில் ’ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலை வைத்திருந்தார். அவரிடம் அந்த நாவலை வாங்கிச் சீக்கிரமே படித்து முடித்துவிட்டேன். எனக்கு மனதில் பெரிய அதிர்வைக் கொடுத்தது அந்த நாவல். படித்ததும் எழுந்த கேள்விகளுடன் சுந்தர ராமசாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
அப்போதிருந்த உங்களது மனநிலைக்கு அந்த நாவல் ஒத்திருந்ததா?
“ஆமாம். உதாரணமாக, ’குடிக்கிறேன் – அது ஒரு தற்காலிகத் தற்கொலைதான்’ என்று அந்த நாவலில் வரும் வாக்கியம் என்னை உலுக்கியெடுத்துவிட்டது. நான் உணர்கிற உலகத்திற்கு நெருக்கமானதாக அந்த நாவல் இருந்தது. சுந்தரராமசாமியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். ரொம்பவும் சகிப்புத் தன்மையுடன் இருந்தார் அவர். நான்தான் அதிகம் பேசுவேன். ’உங்களிடம் ஒரு கனவு இருக்கிறது. நீங்கள் எழுதவேண்டும். ‘ஆர்.டி.லெய்ங்’ என்கிற கைக்கியாரிஸ்ட், ’வேலை செய்வதுதான் மனநெருக்கடிக்குப் பெரிய சிகிச்சை’ன்னு சொல்றார். அதனால் எழுதுங்கள்’ என்று சொன்னார்.”
மலையாளச் சாயல் படிந்த மொழி நடை உங்களுடையது. இந்த மொழியைக் கூர்மைப்படுத்தியதில் யாருக்குப் பங்கிருக்கிறது?
“என்னுடைய நடை தூய தமிழில்தான் உள்ளது. உரையாடல்களில் என் வட்டார வழக்கு வருகிறது. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம் போன்றவர்களின் படைப்புகளை விட என்னுடைய படைப்புகளில் சமஸ்கிருதப் பிரயோகம் குறைவுதான்…”
தொடரும்..
