நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருபாநகரைச் சேர்ந்தவர் மனோ ரஞ்சிதம். இவர், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நேரத்தில், மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதே பாணியில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் கல்லூரிப் பேராசிரியர் வீட்டிலும், மற்றொரு வீட்டிலும் புகுந்து மொத்தம் ரூ.92 ஆயிரம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது தினமும் நள்ளிரவு நேரத்தில் 3 பேர் சாலையில் வேட்டியால் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு, நடந்து சென்று வீடுகளை நோட்டமிடுவதும், பூட்டியுள்ள வீடுகளின் சுவர் ஏறிக் குதித்து கொள்ளையடிப்பதும் பின்பு செளவுகரியமாக நடந்து செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளது. இச்சம்பம் குறித்து அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.