RR vs MI: "வைபவ் சூர்யவன்ஷிட்டருந்து புதிய ஷாட்களைக் கத்துக்கணும்" – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்

Spread the love

நடப்பு ஐ.பி.எல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.8) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் – ராஜஸ்தான் அணியும் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸை 27 ரன்களில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

குறிப்பாக ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு ஜெய்ஸ்வால் முக்கிய பங்காற்றி இருக்கிறார். 32 பந்துகளில் 77 ரன்கள் விளாசிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் விருது வென்ற பிறகு பேசிய ஜெய்ஸ்வால், “எந்த ஓவர்களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது எந்தப் பந்துவீச்சாளரை அடித்து ஆடலாம் என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

RR vs MI match
RR vs MI match

யாரை இலக்கு வைக்கலாம், என்னென்ன ஷாட்களை விளையாடலாம் என்று நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே ஆட்டத்தில் முழுமையாகத் திளைத்திருந்தேன்.

ஒவ்வொரு முறையும் எனது பயிற்சியின்போது நான் எனது சிறந்த பங்களிப்பை அளிக்க முயற்சிக்கிறேன். நான் என்ன செய்ய முடியும், எப்படி முன்னேறலாம், வெவ்வேறு விதமான ஷாட்களை எவ்வாறு உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறேன்.

எந்த மாதிரியான ஆடுகளத்தில் எந்த ஷாட்களை ஆட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

நான் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, எனது அணிக்காக என்ன செய்ய முடியும், எப்படி விளையாட முடியும் என்றுதான் யோசிப்பேன். காலத்திற்கு ஏற்றவாறு எனது ஆட்ட முறையை மாற்றிக்கொண்டே இருக்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட ஷாட் தேவை என்று எனக்குத் தோன்றினால், நான் அதை விளையாடுவேன். எனது அணியை முன்னிறுத்தி, அணியின் தேவைக்கு ஏற்ப விளையாடவே நான் முயற்சி செய்கிறேன்.

RR match
RR match

வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் விதம் பிரமிக்கத்தக்கது. அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். அதைப் பார்க்கும்போது எனக்கும் ஊக்கம் கிடைக்கிறது. நாமும் சில புதிய ஷாட்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும்.

நாங்கள் எப்போதும் ஆட்டத்தைப் பற்றி விவாதிப்போம். அவர் ஒரு பந்துவீச்சாளரை அடித்து ஆடத் தொடங்கினால், ‘நீ அவரைத் தைரியமாக எதிர்கொள், பயமில்லாமல் விளையாடு’ என்று அவருக்கு நேர்மறையான கருத்துக்களைக் கூறிக்கொண்டே இருப்பேன்.

அவர் ஒரு சிறந்த வீரர், ஆட்டத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். தனது ஆட்டத்தை ரசித்து விளையாடுகிறார். மேலும் நம்பமுடியாத அளவிற்குச் சிறப்பாகச் செயல்படுகிறார்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *