ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லை. பிராந்தியம் மற்றும் கோட்டத் தலைவர்களே, ஆர்.எஸ்.எஸ் தலைவரை நியமிக்கின்றனர். பொதுவாக, 75 வயதுக்குப் பிறகு எந்தப் பதவியும் வகிக்காமல் பணியாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

எனக்கு 75 வயது நிறைவடைந்துவிட்டது. அதை ஆர்.எஸ்.எஸ்-க்குத் தெரிவித்தேன். ஆனால், அமைப்பு தொடர்ந்து பணியாற்றும்படி என்னிடம் கேட்டுக்கொண்டது. ஆர்.எஸ்.எஸ் எப்போது பதவி விலகச் சொல்கிறதோ, அப்போது நான் விலகிவிடுவேன். ஆனால் பணியிலிருந்து ஓய்வு பெறுவது ஒருபோதும் நடக்காது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல. அவர் இந்துவாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைப் பின்பற்றுவதில்லை. தொண்டர்கள் தங்கள் பணியின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுகிறார்கள்.