அம்மாவின் தொண்டர்களுக்கு சசிகலாவின் வீடு எங்கே இருக்கிறதென தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் பலருக்கும் அவர்களின் அம்மாவின் வீடே நியாபகம் இல்லை என்பதுதான் ஷாக். ‘அம்மா வீட்டுக்கு பக்கத்து வீடுன்னு சொல்றேன். அப்புறமும் ஏன்ணே பக்கத்து தெருவுல போயி முட்டிட்டு இருக்கீங்க’ என அம்மாவின் தொண்டர்களுக்கே போயஸ்கார்டனுக்குள் வழி சொல்லி அழைத்துக் கொண்டிருந்தனர் சசிகலாவின் உதவியாளர்கள்.

ஆதரவாளர்களை வராண்டாவில் சேர் போட்டு அமர வைத்து காபி, டீ பரிமாறிக் கொண்டிருந்தனர். பத்து பத்து பேராக அழைத்து சின்னம்மா பேசுவார் என உதவியாளர்கள் தகவல் சொல்லிவிட்டு போனர். இடையில் அனைவருக்கும் ஒரு பார்ம் கொடுத்து அதிமுகவிலிருந்து வருகிறீர்கள் எனில் எத்தனை ஆண்டுகள் எந்தெந்த பதவிகளில் இருந்தீர்கள் என்று ஒரு கேள்வியும் மாற்றுக்கட்சியாக இருந்தால் எந்தக்கட்சி என்ன பதவி என கேட்டு நிரப்பிக் கொண்டிருந்தனர்.
உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு ஒரு சாமியாரை திருவள்ளூர் அமமுக மா.செ அழைத்து வந்திருந்தார். நிர்வாகிகள் சந்திப்பிலேயே எதுவும் யாகம் வளர்த்து தமிழக அரசியலில் புயல் வீச செய்யப்போகிறார்களோ என பகீரென்றது. என்னவென விசாரித்ததில், ‘திருவள்ளூரின் தண்டலத்தில் உள்ள தடுத்தாட் கொண்டீஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகளை செய்து சின்னம்மாவுக்கு பிரசாதத்தை கொண்டு வந்திருக்கிறோம். அதைக் கொடுத்துவிட்டு அமாவாசையில் அடுத்த பூஜைக்கான ஆர்டரையும் வாங்கிவிட்டு செல்லலாம் என வந்திருக்கிறோம்’ என்றனர்.