சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை- மகன் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து கடந்த 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில், ”9 போலீஸாருமே குற்றவாளிகள்தான்” என தீர்ப்பளித்த நீதிபதி முத்துக்குமரன், தண்டனை விபரம் குறித்து வரும் 30-ம் தேதி அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.
இனி இந்த வழக்கு கடந்த வந்த பாதையைப் பற்றி பார்ப்போம்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா தொற்று பரவலால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
19.06.2020: இரவு நேரத்தில் ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்று கொடுமையாகத் தாக்கினர்.
20.06.2020: போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி, இருவர் மீது வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்தனர்.
22.06.2020: போலீஸார் கடுமையாகத் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த பென்னிக்ஸ் உயிருக்குப் போராடிய நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

23.06.2020: ஜெயராஜூம் உயிருக்குப் போராடியதால், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார். போலீஸ் காவலில் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸாரைக் கண்டித்து சாத்தான்குளத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
24.06.2020: இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு எடுத்தது. ”இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளை தீவிரமாக கண்காணிப்போம்” என, மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அமர்வு உத்தரவு பிறப்பித்தனர்.