மதுரை: “இதற்கு மேல் எப்படி தேர்தல் பணியாற்ற முடியும். மக்கள் ஒரு முடிவெடுத்து மாற்றிப்போட்டதால் தோல்வியடைந்தோம்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விரக்தியுடன் கூறியுள்ளார்.
மதுரையில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ரவுடிசம், துப்பாக்கிச் சூடு நடக்கிறது. தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக நடந்த காவல் துறை என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது.
திமுக ஆட்சியில் காவல் துறைக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. காவல் துறைக்கு இந்த ஆட்சியில் களங்கம்தான் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரவணனுக்காக கூவி கூவி ஓட்டு கேட்டோம். அதிமுக தொண்டர்கள் பம்பரம் போல் சுழன்று வேலைப்பார்த்தனர். இதற்கு மேல் எப்படி தேர்தல் பணியாற்ற முடியும். மக்களும், சில சமூகத்தினரும், மக்களவைத் தேர்தல் என்பதால் பிரதமர் வேட்பாளரை மனதில் வைத்து மாற்றி ஒட்டுப்போட்டார்கள்.
இதனால், மதுரை அதிமுக கோட்டையாக இருந்தாலும் தோல்வியடைந்தோம். இந்த தோல்வி நிரந்தரமில்லை. அடுத்து வரக்கூடிய சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இன்னும் சிறுபான்மை மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வரவில்லை. வரக்கூடிய தேர்தலில் அவர்களுடைய நம்பிக்கையை பெறக்கூடிய வகையில் மக்கள் பணியாற்றுவோம்,” என்றார்.