சென்னை:
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம்கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 471 நாட்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். வாரத்தில் 2 நாட்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளின்படி இன்று காலை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை முன் ஆஜரான செந்தில் பாலாஜி பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
மு.க.ஸ்டாலின்
இதற்கிடையே டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் அவர் சோனியாகாந்தியையும் சந்தித்து பேசினார். டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று(27ந்தேதி) மாலை சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், டெல்லியில் இருந்து திரும்பிய மு.க.ஸ்டாலினை முதல் நபராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்றார். தொடர்ந்து முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து, பின்னர் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இந்தச் சந்திப்பின்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில், மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அமர்ந்து சிறிது நேரம் பேசினர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
என் உயிர் உங்கள் காலடியில்
இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டு செந்தில் பாலாஜி தனது சமூகவலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.