சென்னை:
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியது. கைதுசெய்யப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும், கட்டுப்பாடும் இல்லை என்று தெரிகிறது.
ஆஜராகி கையெழுத்திட வேண்டும்
மேலும் அவருக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது.
ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும்.
விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.> வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது, என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது.
சிறையில் இருந்து
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். புழல் சிறையின் வெளியேயும், கரூரிலும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
இந்த நிலையில் 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து இன்று(26ந்தேதி)வெளியே வந்தார். அவரை சிறை வாசலில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திரளான தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போது செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிறைவாசம் அனுபவித்தேன். பொய்வழக்கில் இருந்து மீண்டு வருவேன். சட்டபோராட்டம் நடத்திய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் வாழ்நாள் நன்றி. என் மீதான பொய்வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றார்.