அதகளமான `ஆடுகளம்’?
பிரைம் டைடமில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆடுகளம்’ சீரியல், மாலை நேர ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டதில் அதில் நடித்த ஆர்ட்டிஸ்டுகள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
காயத்ரி ஜெயராமன், டெல்னா டேவிஸ், சீனியர் ஆர்ட்டிஸ்டுகளான நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, நடிகை சச்சு ஆகியோர் நடிக்க சன் டிவியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது ‘ஆடுகளம்’ தொடர்.
முன்னதாக நடிகர் டெல்லி கணேஷ் இந்த தொடரில் கமிட் ஆகி சில எபிசோடுகள் நடித்திருந்த நிலையில் மரணமடைந்து விட, அவருக்குப் பதில் கமிட் ஆனார் காத்தாடி ராமமூர்த்தி. பிரைம் டைம் ஒதுக்கப்பட்டு நல்லபடியாகவே போயி கொண்டிருந்தது.
ஆனால், சமீபமாக தொடரின் ரேட்டிங் தொடர்ந்து சரிந்து வந்ததாகத் தெரிய வருகிறது. எனவே தொடரின் ஒளிபரப்பு நேரத்தை பகல் ஸ்லாட்டுக்கு மாற்றியிருக்கிறது சேனல்.
இது குறித்து சீரியல் தொடர்புடைய சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

”சீரியலின் ரைட்டர்கள் ரெண்டு மூணு பேர் மாறிட்டாங்க. அதனால கதையின் போக்குல குழப்பம். சில சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் கதை யதார்த்தமா இல்லைனு வெளிப்படையாகவே பேசி, இப்படியே போனா, தொடர்ந்து நடிக்கறதா இல்லையானு யோசிக்க வேண்டியிருக்கும்னு சொன்னாங்க.
அவங்க சொன்னதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது. உதாரணமாச் சொல்லணும்னா, 6 மாச கர்ப்பிணியா இருக்கிற பொண்ணுக்கு வயிறு தெரியற மாதிரி காட்சியே இல்லை. இந்த மாதிரி மிஸ்டேக்லாம் இருந்தா எப்படி ரேட்டிங் கிடைக்கும்?
ரேட்டிங் சரியில்லைனு ஈஸியா நேரத்தை மாத்துறது சரி, ஆனா அதுக்கு என்ன காரணம்னு யாரும் யோசிக்கற மாதிரி தெரியலை. இப்படியே போனா சீக்கிரத்துல சீரியலுக்கு என்ட் கார்டு போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை” என்றவர்களிடம்,
தொடரின் ஹீரோயின் உள்ளிட்ட சிலர் இந்த நேரமாற்றத்தால் தொடரிலிருந்து வெளியேறப் போவதாக வரும் தகவல்கள் குறித்தும் கேட்டோம்.

”காயத்ரி ஜெயராமன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்தாங்க. வரும் போது பிரைம் டைம்னு சொன்னதாலேயே கமிட் ஆனதாகவும் சொல்றாங்க.. அதனால அவங்களுக்கு அதிருப்தி இருக்கறது நிஜம்தான். தவிர டெல்னா உள்ளிட்ட மேலும் சிலருக்குமே இதுல மன வருத்தம்தான்.
ஆனா சேனல் இப்ப பேசி கொஞ்சம் கன்வின்ஸ் செய்து வச்சிருக்கு. ஆனா எத்தனை நாள் தாக்குப் பிடிப்பாங்கனு தெரியலை” என்கிறார்கள்.
கூமாப்பட்டியில் மழை!
அந்தப் ‘பெரிய’ நிகழ்ச்சிக்குப் போயிருந்தாக் கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்க மாட்டேன். ஜீ தமிழ் என்னை ரொம்பவே பாப்புலர் ஆக்கிடுச்சு. சேனலை நான் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்’ என சந்திப்பவர்களிடமெல்லாம் ரொம்பவே நெகிழ்கிறாராம் கூமாப்பட்டி தங்கப்பாண்டி.

‘தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தா ஏன் பேச மாட்டார்’ என்கிறீர்களா, சேனல் தரும் வாய்ப்புகளைத் தாண்டி, வெளியிலும் நிறைய சந்தர்ப்பங்கள் அமையத் தொடங்கியிருக்கிறதாம்.
விளம்பர நிறுவனங்கள் சில, ரெண்டு பேரையும் ஜோடியாக கமிட் செய்யப் பேச்சுவார்த்தை நடத்திக் கொன்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அக்ரிமென்ட் இறுதியானால் பெரிய பிராண்டுகளின் விளம்பரங்களிலிலும் சீக்கிரமே இவர்களைப் பார்க்கலாம். எப்படியொ கூமாப்பட்டி காட்டில் மழைதான் என்கிறார்கள்.!