வங்காளதேசம்:
வங்காளதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதிவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார்.
ஷேக் ஹசீனா முதல் அறிக்கை
தற்போத வங்காளதேசத்தில் ராணுவத்தின் ஆதரவுடன் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 16 பேர் ஆலோசகர்களாக பதவி ஏற்று உள்ளனர். எனினும் வங்காளதேசத்தில் தொடர்ந்து பல இடங்களில் இன்னும் வன்முறை ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா முதல் முறையாக நாட்டு மக்களுக்கு வேண்டு கோள்விடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் நாட்டு மக்களிடம் இருந்து எனக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது மகன் சஜீப் வாஷாத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
உரிய தண்டனை வழங்க வேண்டும்
வங்காளதேசத்தில் ஜூலை மாதம் முதல், போராட்டத்தின் பெயரால் ஆக்கிரமிப்பு, தீவைப்பு, வன்முறை போன்றவற்றால் பல புதிய உயிர்கள் பலியாகியுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினரும் கூட, பெண் காவலர்கள், ஊடகவியலாளர்கள், கலாச்சாரப் பணியாளர்கள், உழைக்கும் மக்கள், அவாமி லீக் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புத் தலைவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரார்த்தனை செய்கிறேன்.
நேசிப்பவரை இழந்த வேதனையுடன் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தக் கொலைகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆகஸ்ட் 15, 1975 அன்று தன்மொண்டி பங்கபந்து பவனில் நடந்த நரக கொலைகளின் நினைவாக இருக்கும் வீட்டை வங்காள மக்களுக்கு அர்ப்பணித்தோம். ஒரு நினைவு அருங்காட்சியகம் கட்டப்பட்டது. இந்த இல்லத்திற்கு நாட்டு சாமானியர்கள் தொடங்கி, நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரமுகர்கள் வந்துள்ளனர்.
எனக்கு நீதி வேண்டும்
இந்த அருங்காட்சியகம் சுதந்திரத்தின் நினைவுச்சின்னமாகும். எங்கள் வாழ்வுக்கு அடிப்படையாக இருந்த நினைவு எரிந்து சாம்பலாகிவிட்டது. தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் சுதந்திர தேசம் என்ற சுயமரியாதையைப் பெற்று, சுய அடையாளத்தைப் பெற்று, சுதந்திர நாட்டைப் பெற்ற தேசத் தந்தை அவமானப்படுத்தப்பட்டுள்ளார். லட்சக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தை அவமதித்தனர். நாட்டு மக்களிடம் இருந்து எனக்கு நீதி வேண்டும்.
ஆகஸ்ட் 15 ம் தேதி தேசிய துக்க தினத்தை உரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் அனுசரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பங்கபந்து பவனில் பூக்கள் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்து அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தி கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.