1997 பிப்ரவரி மாதம் ஒருநாள் காலை தனது வீட்டை விட்டு வெளியேறிய 55 வயதான ஜக்பந்து மண்டல் என்பவர், தனது மனைவி சுப்ரியா மற்றும் இரு குழந்தைகளை விட்டு காணாமல் போனார். பல நாட்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஒரு ஜோதிடர் அவர் இறந்துவிட்டதாக கூறியதால் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளையும் முடித்து, அவர் திரும்பி வரமாட்டார் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தனர்.
ஆனால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திங்கட்கிழமை மதியம், ஜக்பந்துவே நேரடியாக அவர்களின் வீட்டின் கதவைத் தட்டினார். திடீர் அதிர்ச்சியில் கதவைத் திறந்த சுப்ரியா, வயதாகியிருந்தாலும் தனது கணவரின் குரலையும், முகத்தையும் உடனே அடையாளம் கண்டார். அவரது தந்தை பிஜய் மண்டலும் எந்த சந்தேகமும் இல்லாமல் தனது மகன் என்பதை உறுதிப்படுத்தினார்.
சத்தீஸ்கரில் வேலை இழந்ததால் வீடு திரும்பியதாக ஜக்பந்து கூறினாலும், அவரது வருகைக்கு பின்னணியில் வாக்காளர் பட்டியலைச் சுற்றிய சிக்கலான காரணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, பல ஆண்டுகளாக, அவரது பெயர் பாக்தா தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. ஆனால், SIR திருத்த செயல்முறை ஆரம்பித்தபோது, தனது அசல் வாக்காளர் அடையாளம் மற்றும் நில ஆவணங்களை மீட்டெடுக்க, தனது இருப்பை மீண்டும் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, 2002க்குப் பிறகு SIR திருத்தப் பட்டியலில் ஜக்பந்துவின் பெயர் முழுமையாக காணாமல் போனது. வாக்குச்சாவடி குழுவினர், அவரது இருப்பை உறுதிப்படுத்த எந்த ஆவணமும் இல்லாததால், அவரது இருப்பை மீண்டும் பதிவு செய்வது சிக்கலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
விசித்திரமான திருப்பமாக மாறிய இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் மூலமே நடந்துள்ளது. அதாவது, 28 ஆண்டுகள் இறந்தவராக கருதப்பட்ட ஒரு மனிதரை, மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைக்க காரணமாக மாறியுள்ளது. எனினும், அவரது அடையாளம், வாக்காளர் தகுதி மற்றும் கடந்த காலம் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
November 20, 2025 6:28 PM IST
SIR-ஆல் இணைந்த குடும்பம்…! 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகக் கருதப்பட்டவர் வீடு திரும்பிய அதிசயம்…