பீகார் தேர்தல் குறித்துப் பேசிய அமித் ஷா, “பீகாரில் உங்கள் தேர்தல் பேரணிகளின்போது ‘வாக்குத் திருட்டு (vote chori)’ என்று மக்களிடையே பிரசாரம் செய்தீர்கள். ஆனாலும் நீங்கள் தேர்தலில் தோற்றீர்கள்.
உங்கள் தோல்விக்குக் காரணம் உங்களின் தலைமையும், கட்சியின் செயல்பாடுகளும்தான். EVM அல்லது வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (SIR) காரணமல்ல.
நான் சொல்வது தவறு என்று நினைத்தால், உங்களது காங்கிரஸ் கட்சிக்காரர்களே ஏன் அத்தனை தேர்தல்களில் தோற்றோம் என்பதற்கானக் காரணத்தைக் கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்வார்கள், உங்களிடம் கேள்வி கேட்பார்கள்.

EVM- மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். சரி EVM-யை ஹேக் செய்து காட்டுங்கள் என்று தேர்தல் ஆணையம் அழைத்தபோது இவர்கள் யாரும் செல்லவில்லை.” என்று பேசினார்.
இதையடுத்து திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, ” திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள்” என்றார்.
இதையடுத்து மக்களவையில் இருந்து வெளிநடுப்பு செய்தனர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “உள்துறை அமைச்சர் அமித் ஷா நாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், விவாதத்தை திசை திருப்பி மலுப்பலாக தற்காக்கும் விதமாகப் பேசுகிறார். நான் வெளிப்படையான வாக்காளர் பட்டியலைக் கேட்டேன், அதன் முறைகேடுகளைப் பற்றி கேள்வி கேட்டேன். அவர் அதுபற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை, EVM கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்ளக் கேட்டேன், அவர் அதுபற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை” என்று பேசியிருக்கிறார்.