SIR -க்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல்: கோவை மாவட்டத்தில் மட்டும் 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்!

Spread the love

பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) பணி நடந்து வருகிறது.

ஆரம்பம் முதலே இந்தப் பணிக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையமும் – பா.ஜ.க-வும் கூட்டு சேர்ந்து இயங்குகின்றன எனக் குற்றம்சாட்டியிருந்தன.

மேலும், சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகவும், தேர்தல் முறைகேடுக்கு இந்தப் பணி வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தன.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அதே நேரம், கடுமையான பணிச் சுமையால் SIR பணியில் ஈடுபடும் BLO-க்களின் தொடர் தற்கொலைகளும் சர்ச்சையானது.

இந்த விவகாரங்கள் அனைத்தும் நடந்துவரும் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின.

வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெற்று வாக்காளர்களின் அடையாளங்களை உறுதி செய்தனர்.

ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், களத்தில் இருந்த சிக்கல்கள் காரணமாக இரண்டு முறை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் - SIR
Election Commission – SIR

அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகிறது.

மாவட்டமாக வாரியாக வாக்காளர் பெயர் நீக்க விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது.

> காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது.

> கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள், குடிபெயர்ந்தோர், இரட்டை வாக்காளர்கள் உள்ளிட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

> சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில், 13,30,117 ஆண் வாக்காளர்கள், 13,37,688 பெண் வாக்காளர்கள், 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,68,108 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின் போது கணக்கீட்டு தான் படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 1,00,974 பேர், குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் போன்ற இதர இனங்கள் 2,41,283 பேர், இரட்டை பதிவு இனங்கள் 20,171 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

(தொடர்ந்து பிற மாவட்டத்தின் தரவுகள் இங்கு அப்டேட் செய்யப்படும்)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *