மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.
பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
அதேபோல், இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தமாக 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது.
வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.