தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்பணிகள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
* சிறப்பு தீவிர திருத்தப் பணியினை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் களத்தில் உள்ளனர்.
* இந்த கணக்கெடுப்புக் கட்டத்தில், தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி வாக்காளர்களுக்குக் கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன.
* மாவட்ட தேர்தல் அலுவலர்களால் அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாகப் பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க 04.12.2025 வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 09.12.2025 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.