‘SIR’ முதல் இந்தி திணிப்பு வரை – நிதியமைச்சரை தொடர்ந்து மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி | CM Stalin raises questions to centre citing Thangam Thenarasus’s list of questions

1380182
Spread the love

சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் கேள்விகளை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் முதல் இந்தித் திணிப்பு, கீழடி ஆய்வறிக்கை வரை பல்வேறு கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக சட்டப்பேரவையில், 2025-26 ஆண்டின் கூடுதல் செலவிற்கு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்கினார். அப்போது, அவர் கல்வி, மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். இருப்பினும், மாநில அரசு எவ்வாறு அரசின் திட்டங்களை மக்கள் பாதிக்காத வகையில் திறம்பட செய்யலாற்றிவருகிறது என்பதைப் பற்றியும் விவரித்தார்.

அப்போது அவர், >> மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்வது ஏன்?. அப்படியென்றால் கூட்டாட்சி தத்துவம் என்பது வெற்று முழக்கமா?

>> தேசிய கல்விக் கொள்கை, இந்தியை திணித்து தமிழகக் குழந்தைகளின் கல்வியை சிதைப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா?

>> உபி, குஜராத், மஹாராஷ்டிராவுக்கு அளிக்கும் சாலைத் திட்டங்களை தமிழகத்துக்கு அளிக்க மறுப்பது ஏன்?

>> புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில், தென்னக ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? மதுரை, கோவை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏன்?

>> தமிழக அரசின் நிதியில் கட்டப்படும் வீடுகளுக்கு பிரதமரின் பெயர் எதற்கு?

>> 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ரூ.975 கோடி நிதி எங்கே?

>> ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு தருவது வெறும் ரூ.200. தமிழக அரசு வழங்குவதோ ரூ.1200.

>> ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்துக்கு சேர வேண்டிய ரூ.3,709 கோடி நிதியை ஏன் இன்னும் வழங்கவில்லை?

>> நாட்டு மக்கள் தொகையில் தமிழகம் 6% ஆனால் 4% மட்டுமே நிதிப்பகிர்வு அளிப்பது ஏன்? போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விகளை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் எழுப்பியுள்ள கேள்விகள் பின்வருமாறு:

“நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:

>> ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்தபின்பு, வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி?

>> நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

>> ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?

>> எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

>> பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?

>> இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?

>> கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?

இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?” என்று முதல்வர் ஸ்டாலின் வினவியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *