சென்னை: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. கட்சி கொடியினை ஒருவார காலத்துக்கு அரைக் கம்பத்தில் பறக்க விட்டு மரியாதை செலுத்துமாறும், மூன்று நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறும் கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது,” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர், செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சீதாராம் யெச்சூரி தனது 72-வது வயதில் காலமானார். சென்னையில் 1952-ம் ஆண்டு பிறந்தவர். சிறிது காலமாக நுரையீரல் பாதிப்புக்காக புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (செப்.12) மாலை 3.03 மணிக்கு காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயரிய தலைவராகவும், இடதுசாரி இயக்கத்தின் தனித்திறன் படைத்த தலைவராகவும் உலகறிந்த மார்க்சிய தத்துவ வாதியாகவும் விளங்கினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதன் தொடர்ச்சியாக இந்திய மாணவர் சங்கத்தை பல ஆண்டுகள் வழிநடத்தி அகில இந்திய அளவில் சக்திமிக்க அமைப்பாக மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1975-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட தோழர் சீதாராம் யெச்சூரி தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டவர். 1985-ம் ஆண்டு முதல் மத்தியக்குழு உறுப்பினராகவும், 1992-ம் ஆண்டு முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், 2015 முதல் பொதுச் செயலாளராகவும் செயலாற்றியவர்.
பல உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோடு நெருக்கமாக பழகியவர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடுகளில் கலந்து கொண்டு இன்றைய சூழ்நிலையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னுள்ள கடமைகளை அழுத்தமாக வலியுறுத்தியவர். கட்சியின் அரசியல் நிலைபாடுகளை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் கடந்த 30 ஆண்டு காலமாக தனது முழு பங்களிப்பையும் செய்வதர் தோழர் சீதாராம் யெச்சூரி. குறிப்பாக, தத்துவார்த்த தளத்திலும், மதச்சார்பற்ற பன்முகத் தன்மை கொண்ட கூட்டாட்சி இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்பதிலும் முனைப்பு காட்டியவர். இண்டியா கூட்டணியை உருவாக்குவதில் அவருடைய பங்களிப்பு மகத்தானது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமாக்கரசின் ஆசிரியராக செயலாற்றியுள்ளார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்துத்துவாவை எதிர்த்த போராட்டத்தில் கூடுதலான பங்களிப்பு செய்தவர். இந்து ராஷ்டிரம் என்பது என்ன?, மதவெறியும், மதச்சார்பின்மையும் ஆகிய புத்தகங்கள் முக்கியமான பங்களிப்புகளாகும். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர். மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார். ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய பங்களிப்பு செய்தவர்.
தனது பல்வேறு பங்களிப்புகள் மூலம் பலதுறையினரோடும் உறவுகளை வளர்த்துக் கொண்டவர். தமிழகத்தில் பிறந்தவர் என்பதோடு தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்துவதில் பல்வேறு தருணங்களில் உதவி செய்தவர். தமிழகத்தில் நடைபெற்ற பல தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்து கொண்டு பங்காற்றியவர். கட்சியின் மாநில மாநாடுகள், பல்வேறு அரசியல் சிறப்பு மாநாடுகளில் பங்கு கொண்டு உரையாற்றியவர். தோழர் சீதாராம் யெச்சூரியின் இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும், மதச்சார்பற்ற இயக்கங்களுக்கும் மாபெரும் பேரிழப்பாகும். இந்தியா ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இந்த இழப்பு இந்தியாவின் ஜனநாயக பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துக்கு பேரிழப்பாகும்.
செங்கொடியின் மகத்தான புதல்வர் தோழர் சீதாராம் யெச்சூரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. கட்சி கொடியினை ஒருவார காலத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட்டு மரியாதை செலுத்துமாறும், மூன்று நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறும் கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. தோழர் சீதாராம் யெச்சூரியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக செப்.14 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை புதுடெல்லியில் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் வைக்கப்படும். மாலை 3 மணிக்குமேல் அவர் விருப்பத்தின் அடிப்படையில அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படும்,” என்று அதில் தெரிவித்துள்ளார்.