Sky Dining: கிரேனில் 150 அடி உயரத்தில் சாப்பாட்டு மேசையுடன் தொங்கிய குடும்பம்; போராடி மீட்பு!

Spread the love

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. மூணாறை அடுத்த ஆனச்சல் பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று ‘ஸ்கை டைனிங்’ என்ற பெயரில் வித்தியாசமான சாப்பாடு முறையை செயல்படுத்தி வருகிறது. அதில் டைனிங் டேபிள், இருக்கைகளும் சேர்ந்திருக்கும் வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இருக்கையில் வாடிக்கையாளர்களை அமரவைத்து உணவு பதார்த்தங்கள் வைக்கப்படும். பின்னர் வாடிக்கையாளர்களுடன் டைனிங் டேபிளையும் சேர்த்து கிரேன் மூலம் ஆகாயத்தில் சுமார் 150 அடி உயரத்தில் தூக்கி நிறுத்துவார்கள். அங்கு வைத்து அவர்களுக்கு உணவு பரிமாறப்படும். சுற்றிலும் உள்ள இயற்கையை ரசித்தபடி வாடிக்கையாளர்கள் உணவருந்தலாம். இது புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும் என்பதால் மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் அந்த ஹோட்டலுக்கு விரும்பிச் செல்கின்றனர். கண்ணூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்கள் 2 குழந்தைகளுடன் ‘ஸ்கை டைனிங்’கில்  4 பேர் இன்று மதியம் சாப்பிடச் சென்றுள்ளனர். அதில் 2 வயது குழந்தையும், 4 வயதுடைய மற்றொரு குழந்தையும் இருந்தது. மேலும், ஹோட்டல் ஊழியர் ஒருவரும் உடன் இருந்தார்.

குழந்தையை மீட்கும் தீயணைப்பு வீரர்

5 பேரையும் சேர்த்து கிரேன் மேலே தூக்கி உயர்த்தியது. அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு கீழே இறக்க முயன்றபோது கிரேன் பழுதாகிவிட்டது. வாடிக்கையாளர்களை கீழே இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஹோட்டல் நிர்வாகம் கிரேனில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முயன்றது. அந்த சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடினர். நேரம் அதிகமாக ஆகியும் கிரேனை சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஸ்கை டைனிங் கிரேனில் சிக்கிய குடும்பம்

தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 150 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்கை டைனிங்கின் கீழ் பகுதியில் ஆபத்து காலத்தில் பயன்படுத்தும் வலை விரித்தனர். ஏணி மூலம் மீட்க வாய்ப்பு உள்ளதா என ஆராய்ந்தனர். அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் மேலே சென்று குழந்தைகள் உட்பட 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் 3 மணிநேரம் ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டதை அடுத்து தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டிச் சென்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *