இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவருக்கும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து.
அதை ஸ்மிருதி மந்தனா வித்தியாசமான முறையில், அணித் தோழிகளுடன் கலகலப்பாக நடனமாடிய ரீல்ஸ் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதற்கிடையில் பலாஷ், தன் காதலை மந்தனாவிடம் வெளிப்படுத்திய ரொமாண்டிக் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

அதைத் தொடர்ந்து, திருமணத்துக்கு முந்தைய ‘ஹல்தி’ சடங்கில் சக வீராங்கனைகளுடன் இணைந்து ஸ்மிருதி மந்தனா ஆடிய துள்ளலான நடனமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் ஒரு வைரஸ் பிரச்னை காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் அவர் இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். திருமணச் சடங்குகள் தொடங்கப்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்களால் திருமணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா நேற்று (24-ம் தேதி) தனது திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சக கிரிக்கெட் வீரர்களான ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோரும் நிச்சயதார்த்த அறிவிப்பு வீடியோவை தங்கள் சமூக ஊடகப்பக்கங்களிலிருந்து நீக்கியிருக்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய ஸ்மிருதி மந்தனாவின் மேலாளர் துஹின் மிஸ்ரா, “நவம்பர் 23-ம் தேதி திட்டமிடப்பட்ட திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தந்தை மருத்துவமனையில் இருந்ததால், திருமண விழா நடைபெறுவதை ஸ்மிருதி மந்தனா விரும்பவில்லை. எனவே, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை குணமடைய வேண்டும்” என்றார்.