இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தன் திருமணத்துக்கு முந்தைய ‘ஹல்தி’ சடங்கில் சக வீராங்கனைகளுடன் இணைந்து ஆடிய துள்ளலான நடனம், இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில் மஞ்சள் நிற உடையில், ஸ்மிருதி மந்தனாவுடன் ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா சிங், ஷிவாலி ஷிண்டே, ராதா யாதவ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட இந்திய அணியின் வீராங்கனைகள் சேர்ந்து ஆடியுள்ளனர்.

முகம் மற்றும் கையில் மஞ்சள் தேய்க்கும் ஹல்தி விழா திருமணத்துக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு நடத்தப்படும் சடங்காகும். இந்த விழாவுக்கு ஏற்றபடி கிரிக்கெட் நட்சத்திரங்கள் அனைவரும் மஞ்சள் உடையில் மின்னினர்.
வரும் நவம்பர் 23-ஆம் தேதி ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலைக் கரம் பிடிக்கவுள்ளார்.
இந்த ஹல்தியில் உலகக்கோப்பை அணியினருடன் மகளிர் மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் (WMPL) ரத்னகிரி ஜெட்ஸ் அணியில் மந்தனாவின் சக வீராங்கனையாக இருந்த ஷிவாலி ஷிண்டேவும் இருந்தார். அத்துடன், 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு பொதுவெளியில் அதிகம் தென்படாத ஸ்ரேயங்கா பாட்டீலும் இருந்தார்.
Smriti Mandhana நிச்சயதார்த்தம்
இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை ஸ்மிருதி மந்தனா வித்தியாசமான முறையில், அணித் தோழிகளுடன் கலகலப்பாக நடனமாடிய ரீல்ஸ் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதற்கிடையில் பலாஷ், தன் காதலை மந்தனாவிடம் வெளிப்படுத்திய ரொமாண்டிக் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்ற மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் ஸ்மிருதி மந்தனாவின் கண்களைக் கட்டியபடி மைதானத்தின் மையப்பகுதிக்கு அழைத்து வந்து, அவருக்கு மோதிரம் அணிவித்துள்ளார்.
ஸ்மிருதி – பலாஷ் திருமணம் நாடே எதிர்பார்க்கும் வைரல் வைபவமாக மாறி வருகிறது.