குஜராத் மாநிலத்தின் வல்சாத் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்த பாம்பு ஒன்றுக்கு CPR செய்து உயிரைக் காப்பாற்றிய வனவிலங்கு மீட்பு நிபுணரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்கம்பியில் ஏறியதால் பாம்பிற்கு மின்சாரம் தாக்கியது.
மின் இணைப்பு கொண்ட மின்கம்பியில் பாம்பு ஒன்று இரை தேடி ஊர்ந்து சென்றபோது, திடீரென மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்த பாம்பை பார்த்த உள்ளூர் மக்கள், அருகில் வசிக்கும் வனவிலங்கு மீட்பர் முகேஷ் வயாத்தை தொடர்புகொண்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முகேஷ் வயாத், பாம்பு முற்றிலும் அசைவின்றி கிடந்ததையும், எந்த எதிர்வினையும் இல்லை என்பதையும் கவனித்தார்.
அவர் கடந்த 10 ஆண்டுகளாக பாம்பு மீட்புப் பணிகளில் இருக்கும் அனுபவமும், உள்ளூர் பாம்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பெற்ற பயிற்சியும் காரணமாக, உடனே பாம்புக்கான CPR முறையைப் பயன்படுத்த முடிவு செய்தார்.
பாம்பின் வாயுக்குள் காற்றை ஊதியும், இடைவெளி விடாமல் அதன் மார்புப் பகுதியில் மெதுவாகத் தட்டி தூண்டியும், முகேஷ் வயாத் தொடர்ந்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை சிகிச்சை அளித்தார். நீண்ட நேர போராட்டத்தி பின்பு, பாம்பு மெல்ல சுவாசம் விடத் தொடங்கியது.
அந்தப் பாம்பு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அதன் வாழ்விடம் நோக்கி விடுவிக்கப்பட்டது. இந்த மீட்பு காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.