புதுடெல்லி,ஜன.31-
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. அதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடக்க உரையாற்றினார். குடியரசுத் தலைவரின் வழக்கமான உரைக்கு பின்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் உரை குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சோனியா காந்தி, “குடியரசுத் தலைவர் உரையின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்“ என்று வருத்தப்பட்டிருந்தார்.
சோனியா காந்தியின் பதிலைத் தொடர்ந்து, அவரது கருத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சலிப்பானது. திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்கிறார்” என்று தெரிவித்தார். இந்தக் கருத்துக்களுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவத்து உள்ளது. சோனியாகாந்தின் இந்த விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் விளக்கம் வெளியிட்டு உள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயர் பதவியின் கண்ணியத்தை புண்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை. உரையின் முடிவில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டதாகவும், அவரால் பேச முடியவில்லை என்றும் அந்தத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
உண்மையைத் தெளிவுபடுத்த குடியரசுத் தலைவர் மாளிகை விரும்புகிறது.
குடியரசுத் தலைவர் எந்த நிலையிலும் சோர்வடையவில்லை. உண்மையில், அவர் தமது உரையின் போது எந்தத் தருணத்திலும் சோர்வடையவில்லை. விளிம்புநிலை சமூகங்களுக்காகவும், பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பேசுவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை என்பதை அவர் உறுதியாக நம்புகிறார். இந்தத் தலைவர்கள் இந்தி போன்ற இந்திய மொழிகளில் உள்ள மரபுத் தொடர்களையும் சொல்லாடல் முறையையும் அறிந்திருக்கவில்லை.
அதனால் தவறான எண்ணம் உருவாகியிருக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் நம்புகிறது. எவ்வாறாயினும், இத்தகைய கருத்துக்கள் மோசமானதாக உள்ளன. இவை துரதிர்ஷ்டவசமானவை என்பதுடன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.