2013-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’. சேதுபதிக்கு பெரும் உயரத்தையும், அடையாளத்தையும், எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியதும் இந்தப் படம் தான்.
இவ்வளவு வருடங்கள் கழித்து ‘சூது கவ்வும்’ ரீரிலீஸ் ஆகிறது. அதை அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் மறுபடியும் ஒன்று கூடி கொண்டாடி இருக்கிறார்கள்.

வெவ்வேறு திசைகளில் படப்பிடிப்புகளில் இருந்த நடிகர்கள் ஒன்று கூடியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
விஜய் சேதுபதியோடு அந்த படத்தில் நடித்த பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி, முனிஸ்காந்த் இவர்களோடு இயக்குநர் நலன் குமாரசாமியும் கலந்து கொண்டார்.
மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் ‘சூது கவ்வும்’ அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். சிரிப்பும், களிப்பும், சந்தோஷமுமாக அவர்கள் சந்திப்பு நடந்து முடிந்தது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற பாரதியாரின் வரிகளில் வரும் புகழ்பெற்ற சொற்றொடர் தான் இது. இறுதியில் தர்மம் வெல்லும் என்பதுதான் இதன் அடிப்படை.
நாளைய இயக்குநர் என்ற தொலைக்காட்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமிக்கு இந்தப் படம் பெரும் அறிமுகத்தை பெற்று தந்தது.
அடுத்து வெளிவந்த ‘காதலும் கடந்து போகும்’ இன்றும் வலைத்தளங்களில் கொண்டாடப்படும் படமாக இருக்கும்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘சூது கவ்வும்’ பெரும் வசூலை அள்ளிக் குவித்தது. அடுத்தும் தயாரிப்பாளர் சி.வி.குமார் அவருக்கு காதலும் கடந்து போகும் வாய்ப்பை கொடுத்தார்.
இன்றைய தலைமுறைக்கு சூது கவ்வும் பொருந்தி போகும். பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்த படம் ரீரிலீஸ் ஆகிறது.
தயாரிப்பாளர் சி.வி.குமார் இதை நடிகரும் தயாரிப்பாளரும் ஆன அருண்பாண்டியனுக்கு இந்தப் படத்தை விற்று விட்டார்.
அருண்பாண்டியன் தான் ‘சூது கவ்வும்’ படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அருண் பாண்டியனின் மாப்பிள்ளை அசோக் செல்வனும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.