சீக்கிரமாகப் போட்டியை முடிப்போம் என்ற நோக்கில் ஆடிய மார்க்ரம், ஷிவாங் சர்மா வீசிய பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த பதோனியும் 12 ரன்களுக்கு அவுட் ஆக, பூரான் மட்டும் கொஞ்சம் மாறுதலாக, எல்லாரும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும்போது இவர் மட்டும் கிரீஸில் கபடி விளையாடியதால் ஸ்டம்பிங் மூலம் இஷான் கிஷனால் அவுட் ஆக்கப்பட்டார். “விக்கெட் விடாமல் ஆடினாலே வெற்றி நிச்சயம்” என்ற நிலையில் இருந்த போட்டியை, “ஒரு விக்கெட் விட்டால் அவ்வளவுதான்” என்ற நிலைக்கு மாற்றிய பெருமை லக்னோ அணிக்கே சேரும்.
போட்டியின் நிலையை அறிந்து, “இது சரிப்பட்டு வராது; நான் அடித்தால் மட்டும்தான் உண்டு” எனத் தேவையான நேரத்தில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் எனப் பொறுப்புடன் ஆடி வந்தார் கேப்டன் ரிஷப் பண்ட். ஆனால், அவரைத் தவிர யாருக்கும் போட்டியை வெல்ல வேண்டும் என்ற அக்கறை இல்லாதது போல் ஆடினார்கள் லக்னோவின் மற்ற பேட்டர்கள். 19-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இவரின் இந்த ஓவர் மூலம் போட்டி ஹைதராபாத் பக்கம் கொஞ்சம் சாய்ந்தது.
போட்டி கடைசி ஓவர் வரை சென்று, 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்ட்ரைக்கில் இருந்த ரிஷப் பண்ட், “இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமா?” என்பதைப் போல் மூன்று பவுண்டரிகள் விளாசி ஒருவழியாகப் போட்டியை முடித்துக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் தொடரின் முதல் வெற்றியைப் பெற்றது லக்னோ அணி.