StartUp சாகசம் 51: லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்களின் வரவேற்பை பெற்ற ‘Truckrr’ செயலியின் சாகச கதை!

Spread the love

ஆரம்பத்தில் சுய முதலீட்டில் தொடங்கி, பிறகு StartupTN மற்றும் DST SEED நிதி பெறும் வரை, நிறுவனத்தின் பணத் தேவைகளையும் ஆரம்பக்கட்ட வளர்ச்சிப் போராட்டங்களையும் எப்படிக் கையாண்டீர்கள்?

‘Truckrr’ முழுமையாகச் சுய முதலீட்டில் (Bootstrapped) தொடங்கப்பட்ட நிறுவனமாகும். ஒவ்வொரு ரூபாயும் முக்கியமானதாக இருந்ததால், தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, உண்மையில் மதிப்பை உருவாக்கும் தயாரிப்புகள் (Value creating products) மீது மட்டுமே கவனம் செலுத்தினோம். அந்தத் தயாரிப்புகள் மூலம் விற்பனை (Sales) மற்றும் சந்தா (Subscription) வருவாய் உருவாகும் வகையில் எங்கள் தயாரிப்புத் திட்டவரைபடத்தை (Product roadmap) அமைத்தோம். அதுவே ஆரம்பக்கட்டச் செலவுகளை நிர்வகிக்க (Manage) உதவியது.

நிதி குறைவாக இருந்த காலகட்டங்களில், எங்களின் தொலைநோக்குப் பார்வையும் (Vision) செயல்பாடும் (Execution) தான் எங்களின் உண்மையான மூலதனமாக இருந்தது. ‘StartupTN’ நிறுவனத்தின் டான்சிட் (TANSEED) மற்றும் ‘DST SEED’ போன்ற அரசின் ஆதரவுத் திட்டங்கள், நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதற்கான நம்பிக்கையையும், அடுத்த கட்ட வளர்ச்சிக்கான ஊக்கத்தையும் அளித்தன. இப்பயணம் எளிதானதல்ல; ஆனால், கட்டுக்கோப்பான செலவு முறையைக் கையாண்டு, ‘மதிப்பு உருவாக்கம் → வருவாய் → நிலைத்தன்மை’ (Value creation → Revenue → Sustainability) என்ற பாதையிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தினோம்.

தொழில்நுட்ப அறிவு குறைவாக இருக்கக்கூடிய லாரி ஓட்டுநர்கள் (Drivers), உங்கள் செயலியை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்ப இடைவெளியை எப்படி நிரப்பினீர்கள்?

நாங்கள் ஓட்டுநர்களுக்காகவே பிரத்யேகமாகச் செயலிகளை (Apps) உருவாக்கினோம். எளிய பயனர் இடைமுகம் (Simple UI), உள்ளூர் மொழி (தமிழ்), குறைந்தத் தேர்வுகள் (Minimum clicks), படக் குறியீடுகள் சார்ந்த வழிசெலுத்தல் (Icons-based navigation) போன்ற உத்திகளைப் பயன்படுத்தினோம். களத்திற்கே (Field) நேரடியாகச் சென்று பயிற்சியும் அளித்தோம்.

“செயலியைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை; அதைப் பார்த்தாலே புரிய வேண்டும்” என்பதே எங்களின் வடிவமைப்புக் கொள்கை. இதனால் ஓட்டுநர்களுக்குத் தொழில்நுட்பம் ஒரு சுமையாக இல்லாமல், பேருதவியாக மாறியது.

VITTBI (வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) போன்ற தொழில் காப்பக மையங்களின் ஆதரவு, ஒரு போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஆரம்பக்கட்டத்தில் எத்தகைய நன்மைகளை அளித்தது?

VITTBI போன்ற தொழில் காப்பகங்கள் (Incubators), ஒரு ஸ்டார்ட்அப் (Startup) நிறுவனத்திற்கு அலுவலக இடம் அல்லது நிதியை மட்டும் அளிப்பதில்லை; நமக்கான வழிகாட்டிகள் (Mentors), தொடர்புகள் (Network), மற்றும் நம்பிக்கை ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் வழங்குகின்றன.

குறிப்பாக, VITTBI இயக்குனர் டாக்டர் பாலச்சந்திரன் அவர்களின் ஆதரவு ‘Truckrr’-க்கு மிக முக்கியமானதாக இருந்தது. சரியான வழிகாட்டிகள் மற்றும் முதலீட்டாளர்களை (Investors) இணைப்பதில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாகத் தொழில்நுட்பக் கட்டமைப்பு (Technology architecture) மற்றும் ஐஓடி (IoT) சார்ந்த வளர்ச்சிகள் குறித்துத் தெளிவான வழிகாட்டுதலையும் அவர் வழங்கினார்.

சரியான நபரை, சரியான நேரத்தில் சந்திக்கும் வாய்ப்பு, நமது தயாரிப்பைச் சரியான திசையில் உருவாக்குவதற்கான யுக்தி சார்ந்த வழிகாட்டுதல் (Strategic guidance) மற்றும் முதலீட்டாளர் தொடர்பு (Investor connect)—இவையனைத்தும் ‘Truckrr’-ன் ஆரம்பக்கட்டப் பயணத்தில் மிக முக்கியமானவையாக இருந்தன. எங்கள் யோசனையை ஒரு நிலையான நிறுவனமாக மாற்றுவதில், இப்படியான தொழில் காப்பகங்களின் ஆதரவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *