StartUp சாகசம் 55: இது `திலிக்கான்வேலி’ கதை | The success story of Tiliconveli Tech Park

Spread the love

“முதலீடு நிச்சயம் ஒரு சவாலாகத்தான் இருந்தது. ஆனால், எனக்குள் நான் சொல்லிக்கொண்ட ஒரு விஷயம், ‘மனம் இருக்கும்போது பணம் இருக்காது, பணம் இருக்கும்போது அதைச் செய்ய மனம் இருக்காது’. இதுதான் என்னுடைய சிந்தனை ஓட்டம்.

இப்போது நமக்குச் செய்ய வேண்டும் என்ற மனம் இருக்கிறது, எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை இப்போதே செய்துவிடுவோம் என்று முடிவெடுத்தேன். பிற்காலத்தில் நிறுவனத்தை வளர்த்து, விற்று, பணம் வந்த பிறகு, இதே உத்வேகம் (Motivation) இருக்குமா என்று தெரியாது. அதனால் கடன் வாங்கியாவது, நண்பர்களின் உதவியுடனாவது இதைச் செய்துவிட வேண்டும் என்று களமிறங்கினேன்.

இதே முதலீட்டைப் பெங்களூருவிலோ, சென்னையிலோ செய்திருந்தால் அதற்கான வருமானம் நிச்சயம் வேறாக இருந்திருக்கும். திலிக்கான்வேலியைப் பொறுத்தவரை, இதை நான் ஒரு ‘லாப நோக்கற்ற முயற்சி’ (Not for profit venture) என்றுதான் பார்க்கிறேன். பணத்தை அதிகம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறோம்? ஒன்று நன்கொடை அளிப்போம், அல்லது பிள்ளைகளுக்குக் கொடுப்போம். ஆனால் நான் என் பிள்ளைகள் தங்கள் சொந்தக் காலில் நிற்கக் கற்றுக்கொடுத்துவிட்டால், நாம் அவர்களுக்குச் சொத்து சேர்க்கத் தேவையில்லை. எனவே, அந்தப் பணத்தை இந்த மண்ணில் முதலீடு செய்வோம் என்று நினைத்தேன்.

முக்கியமாக, நாம் தொழிலில் சுறுசுறுப்பாக இருக்கும்போதே இதைச் செய்தால்தான் சாதிக்க முடியும். ஓய்வு பெற்ற பிறகு, ‘எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று கேட்டால் யாரும் நமக்குச் செவிசாய்க்க மாட்டார்கள், ஏன் Appointment கூட கிடைக்காது. செய்யும் காலத்தில், சரியான நேரத்தில் இதைச் செய்துவிட வேண்டும் என்பதுதான் என் கருத்து.”

“திலிக்கான்வேலி என்பது வெறும் கட்டிடமோ அல்லது வேலைவாய்ப்பு மையமோ கிடையாது. இது ஒரு புதிய தொழில் சூழல் அமைப்பின் (Startup Ecosystem) தொடக்கம்.

உதாரணத்திற்கு, நாமக்கல் என்றாலே முட்டை, திருப்பூர் என்றால் பின்னலாடை, சிவகாசி என்றால் பட்டாசு என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தொழில் அடையாளம் உண்டு. அதுபோல, திருநெல்வேலிக்கு ‘திலிக்கான்வேலி’ மூலம் பல சிலிக்கான் வேலி சூழலைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் ஆசை.

நாமக்கல்லில் ஒருவர் கோழிப்பண்ணை வைத்தால், அதைப் பார்த்து இன்னும் பலர் வருவார்கள். அவர்களுக்குள் போட்டி இருக்கும், ஆனால் அந்தப் போட்டிதான் தரத்தை உயர்த்தும் (Optimize), விலையைக் குறைக்கும், வளர்ச்சியைத் தரும். இதே கோட்பாடுதான் இங்கும். நாங்கள் ஒரு 1000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினால், அதைப் பார்த்து இன்னும் நான்கு நிறுவனங்கள் வரும். மொத்தமாக 5000 பேர் வேலை செய்யும்போது, அது ஒரு தொழில் கூட்டமைப்பாக (Cluster) மாறும்.

இன்று 12 நிறுவனங்கள் திலிக்கான்வேலியில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் இங்கிருந்து பயிற்சி பெற்று, உலகின் பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். ‘பரவாயில்லை, நீங்கள் இங்கே கற்றுக்கொண்டு, பறந்து செல்லுங்கள்’ என்றுதான் நான் சொல்கிறேன். முதல் கட்டம் வெற்றி பெற்றுவிட்டது. இன்னும் பல நிறுவனங்கள் இந்தச் சூழலைத் தேடி வந்துகொண்டே இருக்கின்றன”.

“இதற்கு நானே முதல் சாட்சி. அமெரிக்காவில் நான் ‘TechFetch.com’ நிறுவனத்தைத் தொடங்கிய அதே நேரத்தில், அதன் பின்னணிச் செயல்பாடுகளைத் (Back-end operations) திருநெல்வேலியில் தொடங்கினேன். அமெரிக்காவில் நாங்கள் வேலைவாங்கிக் கொடுத்துள்ளோம். ஆனால், அந்தத் தளத்தின் (Platform) அத்தனை தொழில்நுட்ப மேம்பாடுகளும் திருநெல்வேலியில் இருந்துதான் செய்யப்பட்டன.

‘திருநெல்வேலி மக்கள், அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க உதவினார்கள். நாங்கள் வரலாறு படைத்தோம்’ (We created history) – இந்த வரியை நான் முதல் நாளிலேயே எழுதி வைத்துவிட்டேன். அமெரிக்காவில் இருக்கும் அலுவலகத்தைத் தவிர, இந்தியாவில் வேறு எங்கும் எங்களுக்கு கிளை கிடையாது; அனைத்தும் திருநெல்வேலிதான்.

இதைத்தான் நான் மற்ற நிறுவனங்களிடமும் சொல்கிறேன். ‘நாங்கள் சாதித்தோம், உங்களால் ஏன் முடியாது?’ என்று கேட்டு அவர்களை வரவழைக்கிறேன். அவர்களுக்கு வெறும் இடத்தை மட்டும் கொடுக்காமல், ‘Plug and Play’ வசதியை அளிக்கிறோம். அதாவது, இன்று வந்தால் நாளையே வேலையைத் தொடங்கலாம். ஆட்களைத் தேர்வு செய்வது முதல், நேர்காணல் நடத்துவது வரை முழு ஆதரவையும் (Full Ecosystem support) வழங்குகிறோம். இங்குள்ள பணியாளர்களின் விசுவாசமும், திறமையும் நிறுவனங்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *