இன்றைய எண்ணிம யுகத்தில், வணிகம் வெற்றிபெறுவது என்பது வெறும் தரமான தயாரிப்புகளை விற்பனை செய்வதில் மட்டும் இல்லை, வாடிக்கையாளர் சேவையிலும் இருக்கிறது. வாடிக்கையாளர் சேவை என்பதே வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் நம்மிடம் ஈர்க்கும் ஒரு வழி.
பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறிய நிறுவனங்களால் தர இயலவில்லை என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில், சரியான வாடிக்கையாளர் சேவையை யாரெல்லாம் சிறப்பாகத் தருகிறார்களோ அவர்களைத் தேடியே மக்கள் வருவார்கள். அப்படிக் கொடுக்கும்போது நம் வாடிக்கையாளர்கள் நமக்காக பிறரிடம் வாய்வழிப் பரப்புரை செய்வார்கள். இது நமது பரப்புரைச் செலவைக் குறைக்கும், லாபத்தை அதிகரிக்கும்.
இன்றைய நவீன யுகத்தில் பல வகையான மெசஞ்சர்ஸ் உள்ளன. அவற்றில் எதன் வழியாகக் கேட்டாலும் நம்மால் பதில் அளிக்கக்கூடிய வகையில் நம் வாடிக்கையாளர் சேவை மையத்தைக் கட்டமைக்க வேண்டியது அவசியம்.

1. ஒருங்கிணைந்த உரையாடல் (Omnichannel Chat)
வாடிக்கையாளர் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் அல்லது இணையதளம் என எதன் வழியாகக் கேட்டாலும், உடனடி பதில் அளிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்கள் மூலம் 24/7 வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்யலாம். இது வெறும் தகவலுக்காக மட்டுமல்ல, விற்பனையைத் தூண்டும் “உரையாடல் வணிகமாக’ (Conversational Commerce) மாறியுள்ளது.
2. சமூக வலைதள விற்பனை (Social Commerce)
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவை இப்போது வெறும் விளம்பரத் தளங்கள் அல்ல, அவை நேரடி விற்பனை மையங்கள். பயன்பாட்டை விட்டு வெளியேறாமலே வாடிக்கையாளர் பொருட்களை வாங்கும் ‘Shoppable Posts’ மற்றும் ‘நேரலை ஷாப்பிங்’ (Live Shopping) இன்று மிக அவசியம்.
3. டிஜிட்டல் அனுபவம் (Mobile & Web)
வாடிக்கையாளரின் மொபைலே உங்கள் கடையின் கட்டுப்பாட்டு அறை. வேகமான இணையதளம், பிரத்யேக மொபைல் பயன்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் பொருட்களை வாங்க மறந்தால் நினைவூட்டும் ‘புஷ் நோட்டிபிகேஷன்ஸ்’ ஆகியவை விற்பனையைப் பல மடங்கு உயர்த்தும்.
இவை அனைத்தையும் தமிழ்நாட்டின் திருநெல்வேலியிலிருந்து இயங்கும் ஒரு நிறுவனம் முன்னோடியாகச் செயல்படுத்தி, சாட்மேக்சிமா எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வாரம் ‘ஸ்டார்ட்அப் சாகசம்’ தொடரில் சாட்மேக்சிமா நிறுவனர் விக்னேஷ் அண்ணாமலை அவர்களின் சாகசக் கதையைக் கேட்போம்.