பழங்காலத்தில் இருந்தே ஹோர்முஸ் நீரிணை ஒரு முக்கிய வர்த்தக வழித்தடமாக இருந்திருக்கிறது. பாரசீக, கிரேக்க மற்றும் அரபு வர்த்தகர்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக பட்டு, முத்து மற்றும் மசாலா பொருள்களை வர்த்தகம் செய்திருக்கின்றனர். பழைமை வாய்ந்த பாரசீக நகரான ஹோர்முஸ் நகரத்தின் பெயரில்தான் இந்த நீரிணை அமைந்துள்ளது. அந்தக் காலத்திலேயே ஹோர்முஸ் ஒரு முக்கியமான துறைமுக நகரம்.

ஹோர்முஸ் நீரிணையின் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு நாடுகளும் இருக்கின்றன. இந்த சிறிய பகுதி உலகப் பொருளாதாரத்தையே தனது உள்ளங்கையில் வைத்திருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையை தாண்டிதான் பாரசீக வளைகுடாவுக்குச் செல்ல முடியும். கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கும் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டிதான் கப்பல்கள் செல்ல முடியும்.
உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் 20 சதவிகிதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் நடக்கிறது. ஒரு நாளுக்கு 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியாக வர்த்தகமாகின்றன. மேலும், உலகின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி எரிவாயுவில் கால் பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகமாகிறது.
பாரசீக வளைகுடா, கச்சா எண்ணெய் வளம் மிகுதியான பகுதி. இந்த பாரசீக வளைகுடாவையும், ஓமான் வளைகுடாவையும், அரபிக்கடலையும் இணைக்கும் புள்ளிதான் ஹோர்முஸ் நீரிணை.
2024ம் ஆண்டிலும், 2025ம் ஆண்டின் முதல் காலாண்டிலும் உலகின் கால் பங்கு கடல்வழி எண்ணெய் வர்த்தகம் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடந்திருக்கிறது. சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளின் எல்.என்.ஜி எரிவாயுவும் இதன் வழியாக வர்த்தகமாகின்றன.