தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்படுவது கிடையாது என்பதே பெரும்பாலான மக்களின் வாதம். அடுத்த தேர்தல் நெருங்கும்போது ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றிவிடுவது வழக்கம்.
தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கிராமத்தில் இருக்கும் தெருநாய் தொல்லைக்கு தீர்வு காண்போம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று வந்தவுடன் தெருநாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டனர். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கொன்று குவிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள பகடபல்லி என்ற கிராமத்தில் கடந்த 22-ம் தேதி 300 நாய்கள் விஷ ஊசி போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இதே போன்று காமரெட்டி மாவட்டத்தில் 200 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யாச்சரம் என்ற கிராமத்தில் 100 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள சாயம்பேட் மற்றும் அரேப்பள்ளி கிராமங்களில் 300 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அவர்களின் கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள பதிபகா என்ற கிராமத்தில் 200 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விலங்குகள் நல ஆர்வலர் கெளதம் இக்கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,”‘ பஞ்சாயத்து செயலாளர் உத்தரவின் பேரில் தெருநாய்களுக்கு விஷ ஊசி போட்டு கொன்றுள்ளனர்”என்று தெரிவித்தார். அவர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் தெலங்கானாவில் 1100 தெருநாய்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளன.