சென்னை பெரம்பூரில் நேற்று இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கொலையுண்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரைப் போலீசார் கைது செய்து உள்ளனர்.
8 பேர் சரண்
அவர்கள் கொலை நடந்த 4 மணிநேரத்திற்குள் போலீசில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது, ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக அவரது சகோதரர் புன்னை பாலு தனது கூட்டாளிகளோடு ஆம்ஸ்ட்ராங்கை கொலையை செய்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதில், தனது அண்ணனைக் கொலை செய்ததது மட்டுமல்லாமல், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டி வந்தததால், இதனால் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று நினைத்து ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் அன்று ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறி உள்ளார்.
திருமாவளவன் அஞ்சலி
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்க் உடல் பிரேத பரிசோதனை நடந்த ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிமுன்பு இன்று காலை அவரது ஆதரவாளர்கள் சி.பி.ஐ.விசாரணை கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில்விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
உண்மையான குற்றவாளிகள் இல்லை
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. உண்மையான குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். 8 பேர் சரணடைந்துவிட்டதால் புலன் விசாரணையைக் காவல்துறை முடித்துவிடக் கூடாது.
ஆம்ஸ்ட்ராங் போன்றோருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். கூலிப் படைக்கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என்று கூறினார்.