T20 WC: வருண் சக்ரவர்த்தி மாயாஜாலம்: தோல்வியே சந்திக்காத அணியாக சூப்பர் 8-க்குள் நுழைந்த இந்தியா

Spread the love

இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத அணியாக இந்தியா சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்காகத் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ஆனால் வழக்கம்போல் முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய திலக் வர்மா – இஷான் கிஷன் ஜோடி பொறுமையாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் அடுத்தடுத்து விக்கெட்கள் விழ தொடங்கியது. 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆட்டத்தின் வேகத்தை உயர்த்தக் களமிறங்கிய சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சிக்ஸர்–பவுண்ட்ரிகள் மழையாக, இந்திய அணி 193 ரன்களை நெதர்லாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது. 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்த சிவம் துபே அதிகபட்ச ஸ்கோராக மின்னினார்.

இலக்கைத் துரத்திய நெதர்லாந்து அணி தொடக்கத்தில் இந்திய பந்துவீச்சை சமாளித்து ரன்களைச் சேர்த்தது. ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றியவர் வருண் சக்ரவர்த்தி. அவரது மாயாஜால பந்துவீச்சில் 3 விக்கெட்களை இழந்து நெதர்லாந்து அணி தடுமாற்றத்தில் சிக்கியது.

இறுதியில் ஜேக் லயன் மற்றும் க்ரோஸ் அதிரடி காட்டினாலும், அடுத்தடுத்து விக்கெட்கள் விழ்ந்த காரணத்தினால் நெதர்லாந்து அணி 176 ரன்களோடு முடங்கி, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

31 பந்துகளில் 66 ரன்களும் 2 விக்கெட்கள் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய சிவம் துபே, ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி லீக் சுற்றைத் தோல்வியே சந்திக்காத அணியாக, மிகுந்த நம்பிக்கையுடன் சூப்பர் 8 சுற்றில் காலடி எடுத்து வைத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *