தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது- அமைச்சர் ரகுபதி

1287181.jpg
Spread the love

சென்னை: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. புதிய குற்றவாளிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சட்டம் – ஒழுங்கு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “பழிவாங்கும் போக்கிலான முன்விரோத கொலைகள் தான் தமிழகத்தில் நடக்கின்றன. மற்றபடி வன்முறைச் சம்பவங்கள் நடக்கவில்லை. புதுச்சேரியில் நிகழ்ந்த படுகொலைகளைகூட தமிழகத்தில் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டுகிறார்கள்.

வன்முறைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால் எதுவுமே அரசாங்கத்துக்கு தொடர்புள்ளது கிடையாது. அனைத்தும் முன்விரோதம் காரணமாக நடப்பவை. சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற அளவுக்கு எந்த வன்முறைச் சம்பவங்களும் நடைபெறவில்லை. தமிழகத்தில் மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை கூடும், குறையும். ஆனால், அரசாங்கம் இதற்கு எந்தவகையிலும் பொறுப்பாக முடியாது. அரசாங்கம் பொறுப்பாக இருந்தால் எங்கள் மீது குற்றம்சாட்டலாம்.

யார் யாருக்கு முன்விரோதம் இருக்கிறது என்பதை அரசு கண்டறிந்து வருகிறது. ரவுடிகளின் பட்டியலை வைத்துக்கொண்டு அவர்களுக்குள் பகைமையை கண்டறிந்து தீர்த்து வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதன் காரணமாகத் தான் இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் இன்றைக்கும் உள்ளது. எல்லா தொழிலதிபர்களும் நம்மை நாடி வருகிறார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி போன்றோர் இதனை வேறுவிதமாக வேறுகோணத்தில் மாற்றி தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்ல கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவு ஒருகாலமும் பலிக்காது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்கா. தமிழகம் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது.

பழிவாங்கும் செயல்கள் தான் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. இதனை தடுப்பதற்கு அரசு நிறைய முயற்சிகள் எடுத்துள்ளது. முன்னாள் குற்றவாளிகளை அரசு அடையாளம் கண்டு கட்டுப்படுத்துகிறது. ஆனால் புதிது புதிதாக குற்றவாளிகள் வருகிறார்கள். அவர்களை என்ன செய்வது?. அரசு தொடர்ந்து கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அச்சுறுத்தல் இருப்பதாக அரசியல் தலைவர்கள் சொன்னால் அரசு பாதுகாப்பு கொடுக்க தயாராக உள்ளது. ஆனால் யாரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *