பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா சினிமா கனவுகளுடன் வரும் இளம்பெண்கள் பாலிவுட்டில் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியிருக்கிறார்.
“புதிதாக சினிமாவிற்கு வருபவர்களைப் பார்த்ததும், ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், பெரிய கதாநாயகியாக வருவீர்கள்’ என்று முதலில் ஆசை வார்த்தைகளைக் கூறுவார்கள்.

உங்கள் திறமையைப் பாராட்டுவதுபோல் வந்து, ‘அவரைப் போய் பாருங்கள், இவரைச் சந்தியுங்கள்’ என்று கூறி தவறான வழிகளில் திசை திருப்புவார்கள். இதுதான் பாலிவுட்டில் நடக்கிறது.
அறிமுகம் இல்லாதவர்கள் சாக்லேட் கொடுத்தால் வாங்கக் கூடாது என்று சிறுவயதில் பெற்றோர் சொல்லிக் கொடுத்ததை நினைவில் கொள்ளுங்கள்.
இங்கே கொடுக்கப்படுவது உண்மையான சாக்லேட் அல்ல, அது உங்கள் லட்சியங்களையும், ஆசைகளையும் முதலீடாகக் கொண்டு வீசப்படும் வலை. ஏராளமான ஆண்களும் பெண்களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்படுகிறார்கள்.

அப்படி வீசப்படும்போது, சிலர் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சிலர் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் மனரீதியாக உடைந்து, சொந்த ஊருக்கே திரும்பி விடுகிறார்கள்” என்று பாலிவுட் குறித்து பேசியிருக்கிறார்.