Tata: ரூ.9000 கோடி முதலீடு – ஜாகுவாரும் லேண்ட்ரோவரும் நம்மூரில் பிறக்கப்போகுது! என்ன ஸ்பெஷல்?

Spread the love

ராணிப்பேட்டைக்கு அடித்திருக்கிறது அதிர்ஷ்டம். சும்மாவா பின்னே; டாடா மோட்டார்ஸ், தனது தொழிற்சாலையில் கார் உற்பத்தியை இன்று தொடங்கியிருக்கிறது. இந்தத் தொழிற்சாலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார். தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் TRB ராஜாவும் உடன் இதில் பங்கேற்றிருக்கிறார். 

TMPV (Tata Motors Passengers Vehicles) என்பது டாடா குழுமத்தின் ஓர் அங்கம். டாடாவில் இருந்து வரும் பேசஞ்சர் கார்களை உற்பத்தி செய்வதுதான் TMPV. ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் எனும் ஏரியாவில் இருக்கும் சிப்காட் காம்ப்ளெக்ஸில்தான் டாடாவின் பிரம்மாண்டமான இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் டாடாவில் இருந்து வரும் சொகுசு கார்கள், அதாவது லேண்ட்ரோவர், ஜாகுவார் போன்ற கார்கள் இங்கேதான் உற்பத்தியாகப் போகின்றன என்பதுதான் ஹைலைட்டே! 

ஒரு கார் தொழிற்சாலை உருவாவது என்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தொழிற்சாலை மூலம் சுமார் 5,000 இன்ஜீனியர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது உறுதியாகிறது என்கிறார்கள். 

‛‛தொழில்துறை வளர்ச்சியின் மூலம் வளமான தேசத்தை உருவாக்குவதில் டாடா மோட்டார்ஸ் எப்போதுமே தமிழ்நாட்டுடன் பார்ட்னர்ஷிப் வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட உலகப்புகழ் பெற்ற டாடா மோட்டார்ஸின் தலைவராக சந்திரசேகரன் இருப்பது நம் தமிழ்நாட்டுக்கே பெருமை!’’ என்றார் முதல்வர் ஸ்டாலின். 

டாடா பிராண்டின் தலைமையில் உருவாகும் ரேஞ்ச்ரோவர் இவோக் எனும், இங்கே தயாரான முதல் சொகுசு காரைக் கொடி அசைத்து  rolled-out செய்து வைத்தார்கள் முதல்வரும், டாடா குழும சேர்மனுமான சந்திரசேகரனும். 

மொத்தம் 470 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்து கிடக்கும் இந்த ப்ளான்ட்டில் ICE (Internal Combustion Engines) மற்றும் EVs (Electric Vehicles) என இரண்டு இன்ஜின்களுமே தயாராகப் போகின்றன. அடுத்த 5 – 7 ஆண்டுகளுக்குள் ஆண்டுக்கு 2,50,000 வாகனங்களைத் தயாரிப்பதுதான் டாடாவின் திட்டம்.

நாம் வியந்து பார்க்கும் சொகுசு பிராண்ட் கார்கள், இனிமேல் நம் ஊரில் தயாரிக்கப்படப் போகிறது என்பதே பிரமிப்பாகத்தான் இருக்கிறது. அதனால் இதன் விலையும் கணிசமாகக் குறைய வாய்ப்புண்டு. உதாரணத்துக்கு, ஒரு ரேஞ்ச்ரோவர் இவோக் காரின் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை 65 லட்சம். இனிமேல் எது எவ்வளவு வரப்போகிறது என்று பார்க்கலாம். 

‛காரை ஓட்டலை; கப்பலையே ஓட்டுறேன்’ என்று ஜாகுவார் காரின் ஓட்டுதல் பற்றி ஒரு சினிமா டயலாக் உண்டு. அந்தக் கப்பலையே இனிமேல் ராணிப்பேட்டையில்தான் தயாரிக்கப் போகிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்து உலகமெங்கும் தரிசனம் தரக் காத்திருக்கின்றன ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *