மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வரும் 15-ம் தேதி மாநகராட்சி தேர்தல்கள் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் முதல் முறையாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இது தவிர காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
227 வார்டுகளில் மொத்தம் 1700 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளான நேற்று 453 பேர் தங்களது மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர். இத்தேர்தலுக்காக தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் இணைந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர்.
இதில் ஸ்வாபிமான் நிதி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். 700 சதுர அடி வரையுள்ள வீடுகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். குடியிருப்பு கட்டடங்களில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவமாக வழங்கப்படும். குப்பைகளை சேகரிக்க வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படும். ரூ.10-ல் சாப்பாடு வழங்கப்படும். மும்பை மாநகராட்சியில் சொந்த ஆம்புலன்ஸ் சேவை, புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்படும்.
மும்பை மாநகராட்சி பார்க்கிங்கில் இலவச பார்கிங் அறிமுகம் செய்யப்படும், பஸ் கட்டணம் குறைப்பு, குடியிருப்பு கட்டடங்களுக்கு சிறப்பு நிதி என்பது உட்பட ஏராளமான இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பேருந்தில் இலவச பஸ் பயணம், இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி என திட்டங்களை அள்ளி தெளித்துள்ளனர். அதோடு வரும் நாட்களில் தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.