கேரளமாநிலம் வயநாட்டில் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்கள் எண்ணிக்கை 300&ஐ தாண்டி உள்ளது. நிலச்சரிவில் சிக்கி 3 கிராமங்கள் அப்படியே முழுவதும் அழிந்து போனது. அதில் வசித்தவர்கள் நிலைமை என்ன என்பது தெரியாமல் உள்ளது.
தோண்டதோண்ட உடல்கள்
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தோண்டதோண்ட உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. பலியானவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டி உள்ளது.பலத்த மழையின் காரணமாக அங்குள்ள பாலங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் உள்ளது. மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டு ஆறுகளாக மாறி உள்ளதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. முப்படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கனமழையால் அங்குள்ள பெய்லி பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து, நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது.24 டன் எடை கொண்ட இந்தப் பாலம் 90 டன் வரையிலான எடையைத் தாங்கக்கூடியது.
இந்நிலையில், இடிந்த பெய்லி பாலத்தினை சரிசெய்வதற்கு இந்திய ராணுவப்படையினர் கடந்த மூன்று நாள்களாக, கனமழையிலும் போராடி வந்தனர்.
மூன்று நாள்களுக்குள்
இதனைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தை கட்டும் பணியை இன்று மாலையில் முழுவதுமாக முடித்தனர்.
இதனையடுத்து, 350 பேர் கொண்ட ராணுவக் குழுவினர், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.