ராஜஸ்தான்:
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பவள விழா ஜோத்பூரில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
அவசர நிலை
இந்திய வரலாற்றில் ஒரு வேதனையான அத்தியாயமாக 1975 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை அமைந்தது.அவசரநிலை நீடிக்கும் வரை உரிமைகள் தொடர்பாக யாரும் எந்த நீதிமன்றத்தையும் நாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுதந்திரம் ஒரு தனிநபரால் பிடுங்கப்பட்டது . எந்த தவறும் செய்யாமல் பலர் கைது செய்யப்பட்டனர்.நீதித் துறை அப்போது அடிபணிந்தது. நீதித்துறை அடிபணியாமல் இருந்திருந்தால், அவசர நிலை தொல்லைகள் இருந்திருக்காது .
ஜூன் மாதம் 25ஆம் தேதியை “அரசியல் சாசன படுகொலை தினம்“ என்று அனுசரிப்பதற்காக பாராட்டுகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு தனிநபரால் பொறுப்பற்ற முறையில் காலில் போட்டு மிதிக்கப்பட்ட நாளை இது நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
பலவீனப்படுத்த நோக்கம்
நாட்டை உள்ளிருந்தே பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தீங்கு விளைவிக்கும் செயல் திட்டங்களை இப்போது சிலர் வைத்துள்ளனர். ஜனநாயகத்தைப் பாதுகாப்ப தற்கான மூன்று அமைப்புகளிலும் இத்தகைய சக்திகள் ஊடுருவக்கூடும் அவற்றின் உண்மையான நோக்கங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.
நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் வலிமையையும் ஒருமைப்பாட்டையும் பராமரிப்பதில் ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நாடாளுமன்றம்,சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றின் தவிர்க்க முடியாத பங்காக உள்ளது.
தேசிய நலனுக்கு முன்னுரிமை
தேச விரோத சக்திகள் நமது ஜனநாயகத்தை தடம்புரளச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன .தேசிய நலனுக்கு மக்கள் முன்னுரிமை அளிக் வேண்டும்.இத்தகைய தீய நோக்கங்களிலிருந்து நமது அமைப்புகளைப் பாதுகாக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஜி.மாஸிஹ், சந்தீப் மேத்தா, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பன்சாலி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஎம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தான் மாநில சட்ட அமைச்சர் ஜோகா ராம் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.