பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், பேட்மிட்டன், வில்வித்தை உள்ளிட் போட்டிகளில் இந்தியாவின் பதக்க கனவுகள் மயிரிலையில் தப்பின.
வினேஷ் போகத்
இதற்கு எல்லாம் இடிவிழுந்நது போல் மல்யுத்தத்தில் இறுதி போட்டியில் விளையாட இருந்த வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் 100 கிராம் எடை அதிகம் இருந்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் மனம் உடைந்த வினேஷ் போகத் தனது மல்யுத்தத்தில் இருந்து இன்று ஓய்வு அறிவித்து உள்ளார்.
வெண்கலப்பதக்கம்
இந்த நிலையில் ஆக்கி போட்டியில் அரையிறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து இன்று இந்திய அணி வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அறிவித்து இருந்தார். தற்போது அவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கத்துடன் விடைபெறுகிறார்.
இந்த வெண்கலப்பதக்கம் மூலம் கடந்த சில நாட்களாக பதக்க கனவில் இருந்த இந்தியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்து உள்ளது.
நீரஜ் சோப்ரா
இன்று இரவு நடைபெறும் ஈட்டி எறிதல் போட்டியில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்வார் என்று அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஆக்கி போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர்மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.பிரதமர்மோடி வெளியிட்டு உள்ள தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர்மோடி
தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் சாதனை!
இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து, வெண்கலப் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளது! ஒலிம்பிக்கில் அவர்கள் பெற்ற இரண்டாவது பதக்கம் இது என்பது மேலும் சிறப்பு.
அவர்களின் வெற்றி என்பது திறமை, விடாமுயற்சி மற்றும் அனைவரது உணர்வின் வெற்றி.வீரர்களுக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் ஹாக்கியுடன் உணர்ச்சி ரீதியிலான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் இந்த சாதனை நமது தேசத்தின் இளைஞர்களிடையே விளையாட்டை மேலும் பிரபலமாக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.