TikTok ban: டிக் டாக் செயலிக்கு மேலும் 75 நாள் கெடு: மனமிறங்கிய டொனால்டு டிரம்ப் – Kumudam

Spread the love

டிரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றது முதலே உலகின் ஒட்டுமொத்த கவனமும் டிரம்ப் நோக்கி தான் இருக்கிறது. இதற்கு காரணம் அவர் எடுக்கும் சில அதிரடி முடிவுகள் தான். சமீபத்தில் பரஸ்பர வரி விதிப்பு என அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அந்நிய நாட்டு பொருட்கள் மீதான வரி விதிப்பு தொடர்பான டிரம்பின் அறிவிப்பு கிட்டத்தட்ட ஒரு பொருளாதார யுத்தத்திற்கு வழி வகுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதனிடையே புகழ்பெற்ற சமூக வலைத்தளமாக விளங்கும், டிக் டாக் செயலியினை அமெரிக்காவை தளமாகக் கொண்ட உரிமையாளருக்கு விற்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையில் பிடிவாதமாக உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதுக்குறித்து முடிவெடுப்பதற்காக மேலும் 75 நாட்களுக்கு அவகாசம் வழங்குவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிக் டாக் மீது எனக்கு அன்புள்ளது:

முன்னதாக தேசிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பான விவகாரங்களுக்காக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், சில கட்டுபாடுகளை விதித்து அதனை நடைமுறைப்படுத்துமாறு இரண்டு முறை தடை உத்தரவினை நீக்கி காலக்கெடு வழங்கினார்.

இந்நிலையில், ”ஜூன் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்க உரிமையாளர்களுக்கு டிக் டாக் செயல்பாடுகளை விற்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், நிறுவனத்திற்கு மற்றொரு காலக்கெடுவை வழங்குவதாக” டிரம்ப் என்பிசியின் “மீட் தி பிரஸ்” நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார். மேலும், “ஒருவேளை நான் இதைச் சொல்லக்கூடாது, ஆனால் என் மனதில் டிக்டாக் மீது கொஞ்சம் அன்பு இருக்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார் டிரம்ப்.

பரஸ்பர வரி விதிப்பு: முடிவுக்கு வருவது எப்போது?

டிரம்ப் நிர்வாகம் சீனப் பொருட்களுக்கு 145 சதவீதம் வரை வரிகளை விதித்துள்ளது, அதே நேரத்தில் சீன, அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீதம் வரிகளுடன் பதிலடி கொடுத்துள்ளது. ”ஒரு கட்டத்தில், நான் வரி விதிப்பின் அளவை குறைப்பேன். இல்லையெனில், அவர்களுடன் (சீனா) ஒருபோதும் வியாபாரம் செய்ய முடியாது. மேலும் அவர்களும் (சீனாவும்) அமெரிக்காவில் வியாபாரம் செய்ய விரும்புகிறார்கள்” என்று டிரம்ப் மேலும் கூறினார்.

சில பாதுகாப்பு அம்சங்களுக்காக டிக் டாக் செயலி உட்பட சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 58 செயலிகளுக்கு இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜுன் 29 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *