மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் உருவாகியிருக்கும் படம்தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய முன்னணி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “நடிகர் ஜீவாவை எனக்கு அவர் குழந்தையாக இருந்தபோதே தெரியும். எனது இரண்டாவது படத்தில் அவர் கிருஷ்ணர் வேடம் போட்டு நடித்தார். இன்று அவரது மகனைப் பார்க்கும்போது, அவர் ஜீவாவை விட உயரமாக வளர்ந்திருப்பதைப் பார்த்து வியந்துபோனேன்.
ஜீவாவுக்கு இது ஒரு சிறப்பான ‘செகண்ட் இன்னிங்ஸ்’. அவர் பெரிய வெற்றிகளைப் பெறுவார். இந்தப் படத்தைப் பார்க்க தயாரிப்பாளர் கண்ணன் அழைத்தபோது மரியாதை நிமித்தமாகவே சென்றேன். ஆனால், படம் தொடங்கியதும், கதை நகர்ந்ததும் தெரியவில்லை. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக படம் விறுவிறுப்பாகச் சென்றது. இப்போதைய டிரெண்டிற்கு ஏற்ப ஒரு சிறிய கான்செப்ட்டை எடுத்துக்கொண்டு, அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக இயக்குநர் நிஷாந்த் மாற்றியுள்ளார். அவரது உழைப்பு பாராட்டுக்குரியது.