“அதிமுகவை நாசம் செய்திகொண்டிருக்கிறார் பழனிசாமி” – டிடிவி தினகரன்

Spread the love

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார்.

அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார்.

இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்திலேயே ஒரு கூட்டம் போட்டு, “கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், அதையும் மீறி நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் எனத் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்தார். அதனால்தான், அவரது பொறுப்பை எடுத்தோம்.

ஆனால், அவர் திருந்தியபாடில்லை. சீனியர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தோம். உச்சமாக தேவர் ஜெயந்தியன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸைச் சந்தித்தார். அதனால்தான் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் பேசி, செங்கோட்டையனை நீக்கினோம். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன்.

2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று கோபிசெட்டிபாளையத்தில்தான் வெற்றி விழா கொண்டாடப்படும்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி குறித்து இனிதான் முடிவெடுக்க வேண்டும். அது நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.

2017-ஆம் ஆண்டு முதல் பழனிசாமி செய்த துரோகத்திற்கு இப்போது ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அதிமுக தொண்டர்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் அதிமுகவை நாசம் செய்துகொண்டிருக்கிறார் பழனிசாமி.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு அகம்பாவத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார். அண்ணா திமுக கட்சியை, எடப்பாடி பழனிசாமி திமுக கட்சியாக மாற்றிவிட்டார். 2026 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மூலம் அவர் செய்த துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும்” என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *