ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடந்து வருகிறது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை.
மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த த.வெ.க தலைவர் விஜய் அங்கிருந்து கார் மூலம் பெருந்துறை நோக்கிச் சென்றிருக்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய த.வெ.க தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “பெரியார் பிறந்த மண்ணில் வெற்றிக்கழகத் தலைவர் இங்கு வந்திருக்கிறார்.
எல்லோரும் ஆட்சிக்கு வருவோம் எனக் கனவு காண்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களைப் பொருத்தவரை புரட்சித் தளபதிதான் ஆட்சிக்கு வருவார். அதை மாற்றமுடியாது என்ற வரலாறைதான் பெரியார் மண்ணிலே காண்கிறோம்.
ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு நல்ல தலைவர் வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் கனவு விரைவில் நனவாகப்போகிறது.
எல்லோருக்கும் கூட்டம் கூடும்… நம் கூட்டம் எதிர்காலத்தை உருவாக்கும் வெற்றிக் கழகத்தின் கூட்டம்.
தலைவர் மனிதநேயமிக்கவர்… உங்களுக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு வந்திருக்கிறார். இப்படியான தலைவராக புரட்சித் தலைவரைப் பார்த்தேன். இப்போது புரட்சித் தளபதியை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை இது தீர்ப்பளிக்கும் கூட்டம். 234 தொகுதியிலும் தளபதி யாரை கைகாண்பிக்கிறாரோ அவரே எம்.எல்.ஏ என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.” என்றார்