TVK: கிறிஸ்துமஸ் தாக்குதல்; “இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெறக் கூடாது" – தவெக அருண்ராஜ்

Spread the love

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் வடமாநிலங்களான மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் மாநிலங்களிலும், தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கிறிஸ்துமஸ் தாக்குதல்
கிறிஸ்துமஸ் தாக்குதல்

சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நடந்த இத்தகைய தாக்குதல்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தவெக கொள்கைப்பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், “அன்பு மற்றும் கருணையின் வெளிப்பாடாக உலகம் எங்கும் கொண்டாடப்படுவதே கிறிஸ்துமஸ் பெருவிழா. உலகில் உள்ள அனைத்து மக்களும் அக்கொண்டாட்டத்தில் பங்கேற்பதும், அதனை ஆதரிப்பதும் இயல்பான ஒன்றுதான்.

ஆனால், மதச்சார்பின்மை மண்ணான நம் இந்தியத் திருநாட்டில் தற்போது உலக நீதி மற்றும் இயல்புக்கும் எதிரான சில நிகழ்வுகள் நடந்தேறி உள்ளதாகச் சில தகவல்கள் வந்துள்ளன. மனதை வேதனையுறச் செய்யும் அவை நம் தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால் விடுவதாக உள்ளன. டெல்லியின் ஒரு பகுதியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.

ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற ஓர் ஏழைக் குடும்பத்துச் சிறுவன் ஒருவன் கொடுமைக்குள்ளாக்கி விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறான்.

தவெக அருண்ராஜ்
தவெக அருண்ராஜ்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையற்ற சிறுமியை அவளுடைய பிறவிக் குறைபாட்டை ஏளனமாகப் பேசியவர் யார் தெரியுமா? அஞ்சு பார்கவ் என்ற பா.ஜ.க.வின் மாவட்டத் துணைத்தலைவராம்.

உத்தரகாண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஹோட்டலில் நடத்தக்கூட விடாமல் ரத்து செய்ய வைக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் வடமாநிலங்களில் என்றால், நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

அது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளது யார் தெரியுமா? தீவிர ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர்தான். இந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், இனி வரும் காலங்களில், இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெற அனுமதிக்கவே கூடாது.

இதுபோன்ற வன்செயல்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா ஆராதனையில் பங்குபெற்ற மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இதற்கான கண்டனத்தைத் தெரிவித்து, சிறுபான்மை சகோதரர்களின் பாதுகாப்பை உண்மையாகவே உறுதி செய்ய வேண்டும் என்பதை தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி

“எம்மதமும் நம்மதமே” என்ற பேரன்பு மனப்பான்மையுடன் நல்லிணக்கம் காப்பவரே நம் வெற்றித் தலைவர் அவர்கள். ஆகவே, சிறுபான்மை சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே நம் வெற்றித் தலைவர் மற்றும் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான, சமரசமற்ற மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை ஆகும். இதை நம் வெற்றித் தலைவரின் ஒப்புதலுடன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *