கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் தலைமையில் கட்சி சார்பில் ஒரு குழுவை அமைத்தனர். இந்த குழு கட்சியின் தொண்டர் அணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சார்ந்து பயிற்சியளிப்பதுதான் திட்டம். அதன்படி கடந்த நான்கு நாட்களாக காஞ்சியில் உள்ள அதே தனியார் கல்லூரியில் தொண்டரணிக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொண்டரணியினர்தான் இன்றைய நிகழ்ச்சிக்கு பாதுகாப்பையும் வழங்கியிருக்கின்றனர். மதிமுக, தேமுதிகவுக்கு இருந்ததைப் போல ஒரு தொண்டரணியை களப்பயிற்சியோடு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்பது தவெகவின் திட்டம். அதற்கான தொடக்கமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயிகள்,நெசவாளர்கள், மாணவர்கள் என பல தரப்பினருக்கும் நிர்வாகிகள் கடந்த இரண்டு நாட்களாக பாஸை விநியோகித்து நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கின்றனர். நிகழ்ச்சிக்கு கைக்குழந்தையோடு வந்த பெண்களை ஆனந்த் வழிமறுத்து கட்டாயமாக குழந்தையோடு வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். கரூர் சம்பவம் கொடுத்த படிப்பினை இது. அதேமாதிரி, நிகழ்வு காலை 11 மணிக்கு தொடங்குமென தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.