TVK : சிக்கலில் ஜனநாயகன்; டெல்லிக்கு அழைக்கும் சிபிஐ – காங்கிரஸ் குரலுக்காக காத்திருக்கும் விஜய்?

Spread the love

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பனையூர் தவெக அலுவலகமும் பரபரப்பாகியிருக்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என பல முக்கிய மாற்றுக்கட்சிகளின் பிரதிநிதிகளை தவெகவில் இணைத்திருக்கிறார் விஜய். இந்த இணைப்புக்கு பின்னால் சில லாபம் தரும் அரசியல் கணக்குகள் இருந்தாலும், சில சர்ச்சைகளும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. மேலும், ஜனநாயகன் ரிலீஸ் பஞ்சாயத்து, கரூர் விவகாரத்தில் விஜய்க்கு சிபிஐ வழங்கியிருக்கும் சம்மன் என தகதகக்கிறது தவெக வட்டாரம்.

TVK Vijay
TVK VIJAY

முதலில் மாற்றுக்கட்சியினருக்கான இந்த இணைப்பு விழாவை டிசம்பர் 31 ஆம் தேதியே நடத்தி முடிக்கத்தான் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கரூர் வழக்கு சம்பந்தமான சிபிஐ விசாரணைக்கு ஆனந்த், ஆதவ் போன்ற முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் ஆஜராக இருந்ததால் அந்த இணைப்பு விழாவை தள்ளிப்போட்டிருந்தனர்.

இணைப்பில் வித்தியாசம்

அப்போது நடத்த முடியாத அந்த இணைப்பு விழாவைத்தான் புத்தாண்டில் முதல் நிகழ்வாக நேற்று நடத்தி முடித்திருக்கிறார் விஜய்.

இதற்கு முன் தவெகவில் சிலர் இணைக்கப்பட்டதற்கும் இந்த இணைப்புகளுக்கும் ஒரு வித்தியாசம் இருப்பதாக தவெக வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். அதாவது, இதற்கு முன்பு தவெகவில் யாராவது இணைய வேண்டுமெனில் அவர்கள் ஆதவ், ஜான், புஸ்ஸி ஆனந்த் என தலைமைக்கு நெருக்கமான ரூட் வழியாகத்தான் கட்சிக்குள் வர முடியும். ஆனால், நேற்று கட்சியில் இணைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தவெகவின் மா.செக்கள் வழி வந்தவர்கள்.

TVK Vijay
TVK Vijay

மாற்றுக்கட்சியினர் பலரும் தவெகவில் இணைய விரும்புவதாகவும் மாவட்டளவில் இணைப்பு விழாக்களை நடத்த அனுமதி கொடுங்கள் எனவும் பல மாவட்டச் செயலாளர்கள் தலைமையிடம் முன்பிருந்தே அனுமதி கேட்டுக் கொண்டே இருந்தனர். ஆனால், விஜய் ஏனோ அதற்கு அனுமதி கொடுக்காமலே இருந்தார்.

ஆனால், கரூர் சம்பவத்துக்குப் பிறகு அனுபவமிக்க மாற்றுக்கட்சியினரை சேர்த்தால்தான் அமைப்புரீயாக பலம் பெற முடியும் என்கிற விஷயத்தை ஒரு சிலர் விஜய்க்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்துதான் செங்கோட்டையன் போன்றோரை கட்சியில் இணைக்கவே விஜய் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்துதான் மா.செக்களுக்கும் அவர்கள் நீண்ட நாட்களாக கேட்ட அனுமதி கொடுக்கப்பட்டது. தங்கள் மாவட்டங்களில் மாற்றுக் கட்சிகளில் அதிருப்தியாக இருக்கும் நிர்வாகிகளுக்கு தூண்டில் போடுங்கள் என தலைமையிடமிருந்து உத்தரவு போனது. இதனைத் தொடர்ந்தே மா.செக்கள் அழைத்து வந்த 20 க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றிருக்கிறார் விஜய். மேலும், அவர்களை அழைத்து வந்த மா.செக்களையும் தோள் தட்டி பாராட்டியிருக்கிறார்.

TVK Vijay
TVK Vijay

கட்சிரீதியாக தவெகவில் இப்போது வரைக்கும் 128 மாவட்டங்கள் இருக்கிறது. இந்த இணைப்பு விழா மற்ற மா.செக்களுக்கான மெசேஜ் என்றும் கூறுகின்றனர். மாற்றுக்கட்சியினரை அழைத்து வரும் மா.செக்களை விஜய் பாராட்டி அங்கீகரிப்பதால் மற்ற மா.செக்களும் தங்கள் மாவட்டங்களில் மாற்றுக்கட்சியினருக்கு பெரிய வலையாக விரிக்கும் முயற்சியில் இருக்கின்றனர்.

தேர்தல் நேரத்தில் தவெகவின் மா.செக்கள் எதிர்க்கட்சிகளிடம் விலை போய்விடுவார்கள். அனுபவமில்லாததால் அவர்களால் மற்றக் கட்சியினருடன் போட்டி போட முடியாது என்கிற கருத்துகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மா.செக்களை வைத்தே காய் நகர்த்தியிருக்கிறார் விஜய் என்றும் பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

இந்த இணைப்புகள் கட்சிக்குள் இன்னொரு பக்கம் புகைச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கே கட்சிக்குள் முறையாக போஸ்டிங் கிடைக்கவில்லை. இதில் மாற்றுக்கட்சியினரை அழைத்து வந்தால், அவர்கள் பதவி எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு பதவி வழங்கினால் தலைவருக்காக பல ஆண்டுகளாக உழைத்த உண்மையான தொண்டர்கள் இன்னும் பாதிக்கப்படுவோமே என பல மாவட்டங்களிலிருந்து முணுமுணுப்பு குரல்களும் எழுகிறது.

TVK Vijay
TVK Vijay

அதேமாதிரி, நேற்று கட்சியில் இணைந்த திமுகவின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் கார்த்திகேயன், ‘திருப்பரங்குன்றத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி தீபம் ஏற்றாமல் மத அரசியல் செய்கிறது திமுக’ எனப் பேசியிருக்கிறார். திருப்பரங்குன்றம் சென்சிட்டிவான விவகாரம் என்பதால்தான் விஜய்யை ஒரு அறிக்கை கூட விட செய்யாமல் வைத்திருந்தது தவெகவின் வியூக தரப்பு. அப்படியிருக்க புதிதாக சேர்ந்தவர் சகட்டுமேனிக்கு கருத்து கூறியதை விஜய்யின் வியூக தரப்பு ரசிக்கவில்லை.

சென்சார் சர்டிபிகேட் விவகாரம்

ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாகவிருக்கிறது. ஆனால், அந்தப் படத்துக்கு இன்னமுமே சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் படக்குழுவினர் உட்பட ஒட்டுமொத்த தவெகவினருமே பதைபதைப்பில் இருக்கின்றனர். படத்துக்கு உடனடியாக சென்சார் சர்டிபிகேட் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருக்கிறது. விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

சென்சார் சர்பிகேட் கிடைப்பதில் சிக்கலாகி ரிலீஸ் தாமதமானால் அதை வைத்தும் அரசியல் செய்ய தயாராக இருக்கிறது தவெக முகாம். இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் தணிக்கைக் குழு U/A பரிந்துரைத்தும் சென்சார் சர்டிபிகேட் கொடுக்காதது ஏனோ தடுப்பார் யாரோ என ட்வீட் செய்திருந்தார்.

சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் படத்துக்கு பிரச்னை வருமெனில், பாஜகவுக்கு எதிராக விஜய்க்கு ஆதரவாக மெர்சல் சமயத்தில் ராகுல் காந்தி குரல் கொடுத்ததை போல மீண்டும் காங்கிரஸிலிருந்து ஆதரவுக்கரம் நீளும் என்றும் பனையூர் வட்டாரத்தினர் எதிர்பார்க்கின்றனர். அப்படி நடந்தால் அதன் மூலம் கூட்டணிக்காக காங்கிரஸை நெருங்கலாம் என ‘ஜனநாயகன்’ யை வைத்து நிறைய திட்டங்களை வைத்திருக்கிறதாம் விஜய் தரப்பு.

Vijay
Vijay

இன்னொரு பக்கம் ஜனவரி 12 ஆம் தேதி கரூர் வழக்கு சம்பந்தமாக டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்திருக்கிறது சிபிஐ. சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியதைப் போலவே, தென் மாவட்டங்கள் எதாவது ஒன்றில் பிரமாண்டமாக சமத்துவப் பொங்கலை நடத்த திட்டமிட்டிருந்தது தவெக. விஜய்க்கு சிபிஐ சம்மன் வழங்கியிருப்பதால் அந்த பொங்கல் நிகழ்வை எப்போது நடத்தலாம் என்கிற குழப்பத்திலும் நிற்கிறது தவெக.

நேற்று போலவே இன்னும் ஒரு பெரிய நீண்ட மாற்றுக்கட்சியினர் பட்டியலை விஜய்யிடம் கொடுத்திருக்கிறதாம் ஒரு டீம். அதில் விஜய் டிக் அடிப்பவர்களை கொண்டு இன்னொரு இணைப்பு விழாவும் பொங்கல் முடிவில் இருக்குமாம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *