இந்நிலையில் தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் “மள்ளர் சேனை’ என்ற அமைப்பின் தலைவர் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்தை சமீபத்தில் சந்தித்துள்ளது தற்போது தென் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மள்ளர் சேனையின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சோலை பழனிவேல்ராசனிடம் பேசினேன், “தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜைக்கும், அதைத் தொடர்ந்து தேவர் குருபூஜைக்காகவும் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரை வந்தபோது மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். எங்கள் அமைப்பு குறித்து கேட்டார், பின்பு தென் மாவட்ட அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசினோம், மேலும் தேவேந்திர குல வேளார்கள் மக்களின் நீண்டகால கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம், அரசியல், அதிகாரத்தில் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநதித்துவம் குறித்தும் விளக்கினேன்,,” என்றவர்,
தொடர்ந்து பேசும்போது, “தமிழ்நாட்டு அரசியலில் சுப்பிரமணியசுவாமி பரபரப்பாக செயல்பட்ட 96 காலகட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் அவருடன் பயணித்தார்கள், அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரத்தில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார், அதிலிருந்துதான் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது நானும் சமயநல்லூரில் போட்டியிட்டு பொது வாழ்க்கையில் தீவிரமாக இயங்கத் தொடங்கினேன். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினருடனும் நெருக்கமாக பழகுவேன்.

தென் மாவட்டத்தில் மட்டுமின்றி டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெருவாரியாக வாழும் தேவேந்திரகுல வேளாள மக்கள் அரசியல் அதிகாரத்தில், பொருளாதாரத்தில் முன்னேறி வரவேண்டும், அனைத்து சமூகத்தினருடனும் இணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் மள்ளர் சேனையை ஆரம்பித்து ‘சுய சாதிப் பற்று, பிற சாதி நட்பு’ என்ற கொள்கையுடன் சமுதாய மக்களுக்கு செயல்பட்டு வருகிறேன். ஒவ்வொரு தேர்தலின்போதும் நம் சமூகத்துக்கு நன்மை செய்வார்கள் என்று தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்து வந்தாலும் வாக்குகளைப் பெற்ற பின் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை.